தமிழகத்தில் 38 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை; மக்களின் அமோக ஆதரவு பெற்றாரா ஸ்டாலின்? - ஒரு அரசியல் பார்வை!

DMK alliance lead in Tamil Nadu- தமிழகத்தில் திமுக ஆட்சி ஸ்டாலின் தலைமையில் நடந்து வருகிறது. மிகப்பெரிய அளவில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு கிடைத்திருக்கும் வெற்றி, ஸ்டாலின் மீதான மக்களின் அபிமானமா, அல்லது பாஜக மீதான வெறுப்பா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.;

Update: 2024-06-04 10:53 GMT

DMK alliance lead in Tamil Nadu- திமுக தலைவர் ஸ்டாலின் ( கோப்பு படம்)

DMK alliance lead in Tamil Nadu- கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி, இந்தியாவின் 18 வது நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிவடைந்தது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக தேர்தல்களை தேர்தல் ஆணையம் நடத்தி முடித்த நிலையில், தேர்தல் முடிவுகள் இன்று காலை 8மணி முதல் வெளியாகி வருகின்றன.

தமிழ்நாட்டில்  திமுக மற்றும் திமுக கூட்டணி சார்ந்த காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக தேர்தல் முடிவுகள் இருந்து வருகின்றன. பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக போட்டியிட்ட தர்மபுரி தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெற வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதில் பாமக  அன்புமணி ராமதாஸ் மனைவி போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்நாட்டில் 38 தொகுதிகளிலும், திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் வெற்றி வாய்ப்பை பெறும் என்பது பிற்பகல் 4 மணி நிலவரப்படி உறுதியாக தெரிய வருகிறது.

இப்படி திமுக கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவளிக்க என்ன காரணம் என்பது, அரசியல் விமர்சகர்கள் பார்வையில் முக்கிய பங்கு வைக்கிறது. ஏனெனில், திமுக தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வருகிறது.

இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு கிடைத்திருக்கும் தமிழக மக்களின் மிகப்பெரிய ஆதரவு என்பது திமுக ஆட்சி தமிழகத்தில் மிகச் சிறப்பாக இருக்கிறதா அல்லது மக்களின் மனம் விரும்பும் ஆட்சியை ஸ்டாலின் தந்து கொண்டிருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

மக்களை பொருத்தவரை திமுக, பலவிதங்களில் ஏமாற்றத்தை தான் மக்களுக்கு தந்து வருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஏனெனில் திமுக தரப்பில் மகளிர் உரிமைத்தொகை அனைவருக்கும் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியாக கூறப்பட்ட நிலையில், மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் அந்த திட்டத்தை ஸ்டாலின் முழுமையாக நிறைவேற்றி தராமல் பெண்ளுக்கு ஏமாற்றம் தரும் விதமாக, தகுதி வாய்ந்த மகளிர் மட்டுமே உரிமைத் தொகை பெறலாம் என்று கூறியது மிகப்பெரிய அதிர்ச்சியை குடும்ப பெண்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

அது மட்டும் இன்றி இலவசமாக மகளிர் பஸ்கள் இயக்கப்பட்டாலும் மகளிருக்கான தாலிக்கு தங்கம் உள்ளிட்ட சில முக்கிய அரசு திட்டங்களை எல்லாம் திமுக தொடர்ந்து செயல்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக விண்ணை முட்டும் விலை வாசி உயர்வை தடுக்க, குறைக்க திமுக தரப்பில் ஒரு கடுகளவு கூட முயற்சிக்கவில்லை என்பதும் மிகப்பெரிய உண்மை.

அதே வேளையில் அதிமுகவின் பலவீனமும், கட்சிப் பிளவும் திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை அளித்திருக்கிறது என்பதை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். ஏனென்றால் தமிழக முன்னாள் முதலமைச்சர், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இபிஎஸ் ஓபிஎஸ் என்ற இரு அணிகளாக பிரிந்த நிலையில், கட்சிக்குள் ஒரு மிகப்பெரிய பிளவுபட்ட சூழல் நீடிக்கிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மீது பெரும்பான்மையான மக்களுக்கு போதிய ஆர்வமோ, மிகப்பெரிய ஒரு எதிர்பார்ப்போ இல்லை என்பதை ஒத்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை.

எடப்பாடி பழனிச்சாமி, மக்களின் மனம் கவர்ந்த ஒரு மிகப்பெரிய அரசியல் தலைவராக அடையாளம் பெறாதது இதில் மிகப்பெரிய பலவீனமாக பார்க்கப்படுகிறது. 

இதையெல்லாம் விட நிச்சயமாக, பாஜக தமிழ்நாட்டில் வந்துவிடக்கூடாது என்பதில் தமிழக மக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். அதுதான் திமுக கூட்டணியின் இந்த மிகப்பெரிய வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் பார்வையில் கூறப்படுகிறது.

ஏனென்றால் பாஜக ஆட்சிக்காலத்தில் தொழில் நகரங்கள் பலவும் பல்வேறு நெருக்கடிகளால் தொழில் உற்பத்தியை இழந்து, தொழில் வாய்ப்பை, வேலை வாய்ப்பை  இழந்து தவிக்கின்றன. தொழிலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில்  இருந்து மீண்டு வருவோமோ, மாட்டோமோ என்ற போராட்ட நிலையில் தமிழகத்தில் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

அதனால் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி என்பதே மக்களின் வாழ்வாதாரமாக உள்ள நிலையில், அந்த வாழ்வாதாரத்தை கெடுக்க கூடிய பாஜகவின் ஆட்சியை நிச்சயமாக தமிழ்நாட்டில் காலூன்ற விடக்கூடாது என்ற முடிவில் தான்,  பாஜகாவுக்கு எப்பவுமே சம்மட்டி அடி தோல்வியை கொடுப்பதில் தமிழக மக்கள் முழு பலத்துடன் ஒற்றுமையாக நிற்கின்றனர். அந்த வகையில் பாஜகவுக்கு எதிரான கூட்டணி என்பதால் மட்டுமே திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு தமிழக மக்கள் அமோக ஆதரவளித்துள்ளனர் என்பது தான் இதில் நிதர்சனமான உண்மை என்று தெரிய வந்துள்ளது.

Tags:    

Similar News