கொரோனா நான்காவது அலை ஜூன் 22-ந்தேதி வரப்போவது உங்களுக்கு தெரியுமா?
ஜூன் 22-ந்தேதி கொரோனா நான்காவது அலை வரப்போவதாக கான்பூர் ஐ.ஐ.டி. நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சீனாவின் வுகான் நகரில் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனா நோய் என்னும் கொடியஅரக்கனால் ஏற்படும் பாதிப்பு, அழிவுகள், ஆபத்து இன்னும் ஓய்ந்தபாடில்லை. ஓராண்டுகாலம் உக்கிரமாக தாக்கிய முதல் அலை சற்று ஓய்ந்து இரண்டாவது அலை பரவி அதுவும் தனது கணக்கிற்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான உயிர்களை காவு வாங்கி கொண்டு சென்றது.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் மூன்றாவது அலை ஒமிக்ரான் என்ற பெயரில் பரவத் தொடங்கியது. அது தற்போது கொஞ்சம் ஓய்ந்து உலகில் மட்டுமல்ல இந்தியாவின் பல மாநிலங்களிலும் கொரோனாவிற்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள், தளர்த்தப்பட்டு உள்ள நிலையில் தற்போது தான் மீண்டும் பொதுப்போக்குவரத்து ஓரளவுக்கு முழுமையான அளவில் இயங்குகிறது. வர்த்தகமும் சற்று எழுந்து பொருளாதாரம் உயர தொடங்கியுள்ள சூழலில் மீண்டும் ஒரு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பவர்கள் இந்தியாவின் பிரபலமான உயர் கல்வி நிறுவனமான கான்பூர் ஐ.ஐ.டி. நிபுணர்கள். அவர்கள் கூறியிருப்பது என்ன தெரியுமா?
இந்தியாவில் ஜூன் மாதம் 22ஆம் தேதி உருமாறிய கொரோனா நான்காவது அலை பரவ இருக்கிறது. இந்த நான்காவது அலை ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதியிலிருந்து 22-ம் தேதி வரை உச்சத்தை எட்டுவதற்கான வாய்ப்பும் தெரிவதாக எச்சரிக்கை மணி அடித்து இருக்கிறார்கள். ஏற்கனவே பலமுறை இந்த கான்பூர் ஐ.ஐ.டி. நிபுணர்கள் தெரிவித்த அறிவிப்புகள் அப்படியே நடந்து இருப்பதால் இந்த அறிவிப்பும் மிகவும் ஆபத்தான ஒரு அறிவிப்பாகவே இந்திய மக்களால் பார்க்கப்படுகிறது.
மீண்டும் கொரோனா பரவினால் அதனை எப்படி சமாளிப்பது தமிழகத்தின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 70 சதவீதம் பேர் கொரோனா இரண்டு கட்ட தடுப்பூசி செலுத்தி உள்ள நிலையில் இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது போன்ற கேள்விகள் மக்கள் மனதில் எழுந்துள்ளது. எது எப்படியோ எந்த பெயரில் கொரோனா உரு மாறி வந்தாலும் அதனை ஒரு நோயாக கருதி எதிர்கொள்ளக் கூடிய மனப்பக்குவத்தை மக்கள் ஏற்கனேவ பெற்று விட்டனர்.
'என்னது கொரோனா 4வது அலையா? வந்துட்டு போகுது. நாங்க 1,2,3வது அலையையே தூக்கி சாப்பிட்டோம் தெரியும்ல...' என மக்கள் மனதில் நினைப்பதும் தெரிய வருகிறது.