சென்னை அருகே கரை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: மழை தொடருமா?
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று அதிகாலை, சென்னை - புதுச்சேரி இடையே கரையை கடந்ததாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை நீடித்து வந்தது. குறிப்பாக, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நேற்று கனமழை கொட்டித்தீர்த்தது.
இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 3 மணியில் இருந்து, 4 மணிக்குள்ளாக, சென்னை மற்றும் புதுச்சேரிக்கு இடையே கரையை கடந்துவிட்டதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கான ரெட் அலெர்ட் விலக்கிக் கொள்ளப்படுகிறது. எனினும், வட தமிழகம், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை தொடரும் என்று, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.