தருமபுரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு

தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்

Update: 2022-05-16 06:01 GMT

மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் (கோப்புப்படம் )

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு துறை சார்பில் தேசிய டெங்கு தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, டெங்கு கொசு எவ்வாறு உற்பத்தியாகிறது அதனை தடுப்பது குறித்து விழி ப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது டெங்கு பரவும் முறை, டெங்கு வந்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் நோய் தடுப்பு மருந்து அடிக்கும் வாகனங்கள் ஆகியவற்றை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் , சேகர் பாபு மற்றும் சுகாதார துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து டெங்கு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் தேசிய டெங்கு தினம் கடைபிடிக்கப்படுகிறது. பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், டெங்கு பரவலில் இருந்து காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. .

டெங்கு காரணமாக கடந்த 2012, 2015, 2017, ஆண்டுகளில் அதிகமாக உயிரிழப்பு ஏற்பட்டது. 2017 ல் அதிகமாக 65 பேர் டெங்குவால் உயிரிழந்தனர். ஒவ்வொரு குடியிருப்புகளிலும் கொசு உற்பத்தியாகும் இடங்களை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாநகராட்சி அதிகாரிகளும் ஒவ்வொரு பருவமழைக்கு முன் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பாதிப்பை கண்டறிய எலிசா முறை பரிசோதனை ஆய்வகங்கள் 125 இலிருந்து 300 ஆக உயர்த்தப்பட்டது. வீடு வீடாக சென்று 21000 களப் பணியாளர்கள் அனைத்து இடங்களிலும் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த 5 மாதத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 2485 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு அவர்கள் நலமாக இருக்கின்றனர். தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெங்கு விதிமீறல் தொடர்பாக சென்னையில் 2.5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டது என்று கூறினார்.

Tags:    

Similar News