அவதூறு பேச்சு: அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி பேசுவதற்கு நீதிமன்றம் தடை

தொடர்ந்து அவதூறு பேச்சுக்கள் வருவதால் அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி பேசுவதற்கு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.;

Update: 2023-04-12 07:35 GMT

அமைச்சர் செந்தில் பாலாஜி.

தமிழக மின்துறை, கலால் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. அ.தி.மு.க. ஆட்சியிலும் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க.வில் இணைந்தார். தற்போதைய தி.மு.க. அரசின் அமைச்சரவையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகிப்பதால் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அரசியல் கட்சியினரும், சமூக அமைப்பினரும் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்து சமீபத்தில் அ.தி.மு.க.வில் இணைந்து அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியில் செயல்பட்டு வரும் நிர்மல்குமார் அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி அவதூறாக பேசி வருவதாக புகார் எழுந்தது.

இதைத்தொடர்ந்து தன்னைப்பற்றி   நிர்மல்குமார் தொடர்ந்து பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி விசாரித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பாக மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி தொடர்ந்து அவதூறாக நிர்மல் குமார் பேசுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு நிர்மல் குமார் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், பேசுவதற்கு தடை விதிக்க கூடாது என்றும் அவர்கள் வாதாடினர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து இருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கில் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி இன்று தீர்ப்பு கூறினார். அவரது தீர்ப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி பற்றி தொடர்ந்து பேசுவதற்கு நிர்மல் குமாருக்கு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளார்.

Tags:    

Similar News