டி.ஏ.வி. பள்ளிக்கும் எனக்குமான தொடர்பு: மனம் திறந்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை பள்ளிக்கரணையில், டி.ஏ.வி. கல்விக் குழுமத்தின் புதிய பள்ளியை முதலமைச்சர்.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து உரையாற்றினார்.;

Update: 2022-05-27 10:04 GMT

பள்ளிக்கரணையில். டி.ஏ.வி. கல்விக் குழுமத்தின் புதிய பள்ளியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து உரையாற்றினார். நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

"சென்னையில் கடந்த அரை நூற்றாண்டு காலமாக, கல்விச் சேவையில் ஈடுபட்டு வரும் டி.ஏ.வி. பள்ளிக் குழுமம் சார்பில், பள்ளிக்கரணையில் தொடங்கப்படும் புதிய பள்ளியினுடைய தொடக்க விழாவில் கலந்துகொண்டு, உங்கள் அனைவரையும் சந்தித்து அதே நேரத்தில், என்னுடைய வாழ்த்துகளையும் எடுத்துச் சொல்லக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பினைப் பெற்றமைக்கு, இந்த வாய்ப்பினை வழங்கிய இந்தப் பள்ளியினுடைய நிர்வாகிகள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அண்மையில் கடந்த சில நாட்களாகவே, கல்லூரி, பல்வேறு பள்ளிகளினுடைய விழாக்களில் நான் கலந்துகொண்டு, அங்கு வாழ்த்தக்கூடிய ஒரு நல்ல வாய்ப்பை நான் தொடர்ந்து பெற்று வருகிறேன். அதன் மூலமாக, ஒரு புத்துணர்ச்சியை நான் தொடர்ந்து பெற்று வருகிறேன் என்று சொல்லத்தக்க வகையில் விழாக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

1970-ஆம் ஆண்டு தொடங்கிய ஆர்ய சமாஜ் கல்விச் சங்கத்தின் சார்பில் சென்னையில் டி.ஏ.வி. பள்ளிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.தற்போது, டி.ஏ.வி குழுமத்தின் சார்பில், 8 சுய பள்ளிகள் - 2 அரசு உதவி பெறும் பள்ளிகள் - 3 நிர்வகிக்கப்படும் பள்ளிகள் - 1 தொழிற்பயிற்சி மையம் ஆகியவை நடத்தப்படுகிறது. இதில் சுமார் 30 ஆயிரம் மாணவ மாணவியர்கள் படித்து வருகிறார்கள். சென்னையில் முகப்பேர், கோபாலபுரம், கில்நகர், செளகார்பேட்டை, வியாசர்பாடி ஆகிய இடங்களைத் தொடர்ந்து, இப்போது பள்ளிக்கரணையிலும் தொடங்கப்பட்டிருக்கிறது.

கடந்த அறுபது ஆண்டு காலத்தில் லட்சக்கணக்கான மாணவ, மாணவியரின் வாழ்வில் ஒளியேற்றிய கல்வி நிலையமாக டி.ஏ.வி குழுமம் செயல்பட்டு வருவதற்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளை, வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

கோபாலபுரம் என்பது நான் பிறந்த, வளர்ந்த பகுதி. அந்தப் பகுதியில் முதல் பள்ளி 1970-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மூன்றாவது பள்ளிக்கூடத்தை அன்றைக்கு முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் 1989-ஆம் ஆண்டு முகப்பேரில் தொடங்கி வைத்தார். இப்போது பள்ளிக்கரணையில் இந்தப் பள்ளியை நான் தொடங்கி வைக்க வந்திருக்கிறேன்.

ஆனால், டி.ஏ.வி. பள்ளியில் சீட் வாங்குவது மிகவும் கடினம், எனக்கு அனுபவமே உண்டு. என்னுடைய மகள் செந்தாமரையை கோபாலபுரத்தில் இருக்கக்கூடிய டி.ஏ.வி. பள்ளியில் தான் சேர்த்தோம். அதைத் தொடர்ந்து, என்னுடைய தம்பியினுடைய மகள் பூங்குழலிக்கு பள்ளியில் சீட் கேட்டபோது கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டார்கள். அப்போது ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறோம்.

இதை எதற்காக சொல்கிறேன் என்றால், அவ்வளவு strict ஆக கல்வியைப் பொறுத்தவரைக்கும் நடை போட்டுக் கொண்டிருக்கக்கூடிய ஒரு சிறப்புக்குரிய பள்ளியாக விளங்கிக் கொண்டிருக்கிறது இந்த டி.ஏ.வி. பள்ளி. அதற்குப் பிறகு எப்படியோ கஷ்டப்பட்டு சீட் வாங்கி விட்டோம்.

ஆகவே, இந்த டி.ஏ.வி. பள்ளிக்கு வருகிறபோது, இதற்கும் எனக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது என்பதற்காகத் தான் சுட்டிக்காட்டினேனே தவிர, வேறு ஏதோ விமர்சித்து பேச வேண்டும், அதைக் குறை சொல்லிப் பேச வேண்டும் என்பதற்காக நான் சொல்லவில்லை, அதில் எனக்கு ஒரு மகிழ்ச்சி.

இப்போது இந்த பள்ளிக்கரணை பள்ளியை தொடங்கி வைத்திருக்கிறேன் என்று சொன்னால், அரசுப் பள்ளியாக இருந்தாலும், அரசு உதவி பெறும் பள்ளியாக இருந்தாலும், இதுபோன்ற சி.பி.எஸ்.இ. பள்ளிகளாக இருந்தாலும், கல்விக் கண் திறக்கும் சாலைகளாக அமைந்திருப்பதால் இவை மேலும் மேலும் வளர வேண்டும். வளர்ந்து மாணவ, மாணவியருக்குக் கல்வித் திறமையை மேம்படுத்த வேண்டும் என்று நினைப்பவன் நான்.

உங்கள் டி.ஏ.வி பள்ளிக் குழுமத்தின் குறிக்கோளாக 'இருளில் இருந்து ஒளிக்குக் கொண்டு செல்வது' என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். கல்வி என்பதே இருளில் இருந்து ஒளிக்குக் கொண்டு செல்வதுதான். அதையே குறிக்கோளாக, நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். ஒரு மனிதனிடம் இருந்து யாராலும் பறிக்க முடியாத ஒரு சொத்து எது என்று கேட்டீர்கள் என்றால், இந்த கல்வி என்ற சொத்துதான், யாராலும் பறிக்க முடியாது. அத்தகைய சொத்தை உருவாக்கித் தரக்கூடிய கருவூலங்கள்தான் இதுபோன்ற கல்விச் சாலைகளாக அமைந்திருக்கிறது.

இணைக் கல்வி - உள்ளடக்கிய கல்வி - எனப் பல்வேறு வகையான கல்விமுறைகளைப் பின்பற்றும் நிறுவனமாக, உங்களுடைய நிறுவனத்தை வளர்த்து வருவதை நான் உள்ளபடியே பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.அதிலும் மிக முக்கியமாக பல்வேறு வழிகாட்டி நிகழ்வுகளை நடத்தி வருவது. இரண்டு அரசுப் பள்ளிகளில் தகுதி வாய்ந்த கல்விக்கான உதவிகளை டி.ஏ.வி. பள்ளி சார்பில் செய்து தருவதற்காக ஒப்பந்தம் போட்டிருக்கிறீர்கள்.

திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் மேனிலைப்பள்ளி, சைதாப்பேட்டை அரசு மாதிரி மேனிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுடன் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தங்கள் பள்ளி மட்டும் வளர்ந்தால் போதும் என்று நினைக்காமல், அரசுப் பள்ளிகளுக்கும் பெருந்தன்மையுடன் உதவிக்கரம் நீட்டக்கூடிய உங்களது நோக்கத்தை நான் மனதாரப் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

கோவிட் காலத்தில் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைக்கக்கூடிய வகையில் முன்முயற்சிகளை நீங்கள் எடுத்திருக்கிறீர்கள். அரசின் சார்பில் இல்லம் தேடிக் கல்வி என்ற திட்டத்தை நாங்கள் அமல்படுத்தி வருகிறோம். இதன் மூலமாக லட்சக்கணக்கான மாணவ மாணவியரை மீண்டும் பள்ளிகளில் சேர்த்துள்ளோம். அவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் விடுபட்ட பாடங்களைக் கற்பித்து வருகிறோம்.

தமிழக அரசு, கல்விக்கு முக்கியத்துவம் தரக்கூடிய அரசாக அமைந்திருக்கிறது. பள்ளிக் கல்வியோடு நிறுத்திவிடாமல் கல்லூரிக் கல்வியும் - அதைத் தொடர்ந்து உயர்கல்வியும் கொடுக்கும் அரசாக தமிழக அரசு திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தயானந்தா ஆங்கிலோ வேதிக் என்பதன் சுருக்கமாக டி.ஏ.வி என்பது அமைந்திருக்கிறது. ஆன்மீகவாதியாக இருந்தாலும் - மதத்தில் சீர்திருத்தம் பேசியவர்தான் தயானந்தர் அவர்கள். உருவ வழிபாட்டை நிராகரிக்கக் கூடியவராகவும், மதத்தின் பெயரால் நடக்கக்கூடிய மோசடிகளையும் கண்டிப்பவராகவும் அவர் இருந்திருக்கிறார். மகளிருக்கு சம உரிமை, பெண்கல்வி, தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அந்தக் காலத்தில் இருந்த குழந்தைத் திருமணத்தை கடுமையாக எதிர்த்திருக்கிறார். விதவை மறுமணத்தை ஆதரித்தார். அந்த வகையில் 150 ஆண்டுகளுக்கு முன்பே மிகப்பெரிய சீர்திருத்தவாதியாகவும் இருந்தவர் தான் தயானந்தர் அவர்கள்.

திரும்பத் திரும்ப தயானந்தர் வலியுறுத்தியது உண்மையைத்தான். ''எப்பொழுதும் உண்மையைப் பேசுபவன், நல்லொழுக்கத்தின் கட்டளைகளின்படி செயல்படுபவன், மற்றவர்களை நல்லவர்களாகவும் மகிழ்ச்சியாகவும் ஆக்க முயல்பவன் நல்லவனும் ஞானம் உள்ளவனும் ஆவான்'' என்று அவர் சொல்லியிருக்கிறார். உண்மை, ஒழுக்கம் ஆகியவற்றை தயானந்தர் அவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

அதேபோல் மாணவ, மாணவியரும் உண்மையுடமும் ஒழுக்கமுள்ளவர்களாகவும் வளர வேண்டும். தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில் தனித்திறமைகளும், அறிவாற்றலில் கூர்மையும், உண்மையும், நேர்மையும் உள்ளவர்களால் எளிதில் முன்னேற முடியும். அத்தகைய நோக்கத்தை வளர்ப்பதாக இதுபோன்ற கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும்.

அதே நேரத்தில், இன்னொரு முக்கியமான வேண்டுகோளை இங்கு வைப்பது எனது கடமையாக நான் கருதுகிறேன். தாய்மொழிக் கல்விக்கு ஊக்கம் அளிப்பவையாக உங்களைப் போன்ற கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும். அதேபோல், உங்களது மிகச்சிறந்த திட்டங்களுக்கு தமிழ்ப் பெயர்களைச் சூட்ட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

தாய்மொழிப் பற்றும், தாய்நாட்டுப் பற்றும், ஒவ்வொரு மனிதருக்கும் மிகமிக முக்கியம் என்ற வகையில் இந்த வேண்டுகோளை உங்களிடத்தில் நான் வைக்கிறேன்.மிகப்பெரிய சீர்திருத்தவாதியின் பெயரால் அமைந்துள்ள இந்த டி.ஏ.வி. கல்வி நிறுவனமானது, மேலும் மேலும் வளர்ந்து அனைவருக்கும் கல்வி ஒளியைப் பாய்ச்சிட வேண்டும் என்று அன்போடு கேட்டு, இன்னும் பல சிறப்புகளைப் பெற்று எல்லோரும் பாராட்டக்கூடிய வகையில் அமைய வேண்டும் என்று தமிழக அரசின் சார்பிலும், தமிழ்நாட்டு மக்களின் சார்பிலும் அன்போடு கேட்டு, இந்த நல்ல வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என்பதை எடுத்துச்சொல்லி, என் உரையை நிறைவு செய்கிறேன்." எனத் முதவர் ஸ்டாலின் தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அருமை சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் சென்னை மாநகரத்தினுடைய துணை மேயர் மகேஷ்குமார் டி.ஏ.வி. பள்ளிக் குழுமத்தினுடைய தலைவர் வினய் பாரிக் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

Tags:    

Similar News