இணையதள குற்றப்பிரிவு தலைமையக கட்டுப்பாட்டு அறை விரிவாக்கம்: முதல்வர் உத்தரவு
இணையதள குற்றப்பிரிவு தலைமையக கட்டுப்பாட்டு அறை விரிவாக்கம் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இணையதள குற்றப்பிரிவு தலைமையகத்திலுள்ள 1930 அழைப்புமையம் கட்டுப்பாட்டு அறை ரூ.9.28 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இணையதள குற்றங்கள் குறித்த அழைப்புகள் பெருகி வரும் நிலையில் ஏற்கனவே உள்ள அழைப்பு மையம் / கட்டுப்பாட்டு அறை விரிவாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. அதன்படி இம்மையத்தில் உள்ள 8 இருக்கைகள் இருக்கைகளாகவும், புதியதாக கூடுதல் 15 பணியாளர்களை (மூன்றாண்டுகளுக்கு ரூபாய் 928.57 இலட்சம்) ஒப்பளிப்பு செய்யவும். முதற்கட்டமாக இந்தாண்டிற்கு 310 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சரால் 2023-24ஆம் ஆண்டிற்கான காவல்துறை மானியக் கோரிக்கையின் போது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், இணையதள குற்றப்பிரிவு தலைமையகத்திலுள்ள 1930 அழைப்பு மையம் / கட்டுப்பாட்டு அறையை 15 இருக்கைகள் கொண்ட மையமாக விரிவாக்கம் செய்திட 928.57 இலட்சம் ரூபாய்க்கு நிர்வாக அனுமதி அளித்து முதல்வர் உத்திரவிட்டார்.
இதன்மூலம் இணையதள பொருளாதார குற்றங்கள், மோசடிகள் போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்களை விரைவாக வங்கி கண்டறிந்து, மோசடி நபர்களிடமிருந்து பணத்தை இழந்தவர்களுக்கு பணத்தை மீட்டெடுக்க உதவிடவும், பிற இணையதள குற்றங்களிலிருந்து மக்களை காத்திடவும் இவ்விரிவாக்கம் செய்யப்பட்ட 1930 அழைப்பு மையம்/ கட்டுப்பாட்டு அறை பெரிதும் உதவும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.