கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்: முதல்வர் உறுதி
கள்ளக்குறிச்சியில் மாணவி மரணம் தொடர்பான குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள், தற்போது நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி 12ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி மாணவியின் உடலை வாங்க மறுத்து, பெற்றோர் மற்றும் மாண்வர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று காலை சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர். அத்துடன் அங்கிருந்த காவலர்கள் மீதும் தாக்குதல் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை தடுக்க போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தினர். இந்த விவகாரத்தில் கள்ளக்குறிச்சி வன்முறையில் ஈடுபடுவோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், கள்ளக்குறிச்சியில் நிலவிவரும் சூழல் வருத்தமளிக்கிறது. மாணவியின் மரணம் குறித்து நடைபெற்று வரும் காவல்துறை விசாரணையின் முடிவில், குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். உள்துறைச் செயலாளரையும், காவல்துறை தலைமை இயக்குநரையும் கள்ளக்குறிச்சிக்குச் செல்ல உத்தரவிட்டுள்ளேன். அரசின் நடவடிக்கைகளின் மேல் நம்பிக்கை வைத்துப் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.