தமிழகத்தில் ஜூன் 28 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு?
தமிழகத்தில் இன்று ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளது.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளை (ஜூன் 21) முதல் முடிவுக்கு வரும் நிலையில் இன்று ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையை கட்டுக்குள் கொண்டு வர அரசு கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது. தமிழகத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் நன்கு பலன் அளித்ததன் எதிரொலியாக தற்போது தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்துக்கும் குறைவாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளை (ஜூன் 21) முதல் முடிவுக்கு வரும் நிலையில் நேற்று (ஜூன் 19) தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மருத்துவ குழுக்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள், கோவை உள்ளிட்ட பாதிப்புகள் அதிகமாக காணப்படும் 8 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 30 மாவட்டங்களுக்கு அதிகளவிலான தளர்வுகளை அளிக்க பரிந்துரை செய்துள்ளனர். அதன்படி 30 மாவட்டங்களில் நகர பேருந்துகள் இயக்கம், நகைக்கடைகள், துணிக்கடைகள் போன்றவை திறக்க அனுமதி வழங்க மருத்துவ குழு பரிந்துரை செய்தது. இதனை தொடர்ந்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமை செயலர் இறையன்பு மற்றும் சென்னை டிஜிபி ஆணையர் உள்ளிட்டோரிடம் அடுத்த கட்ட ஆலோசனையை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பேருந்துகள் இயங்க அனுமதி, சிறிய கோவில்கள் திறப்பு எந்த முறையில் வழங்கப்படலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற 28ம் தேதி வரை நீட்டிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து இன்று (ஜூன் 20) முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளது.