தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி விளக்கம் அளிக்க அரசுக்கு கோர்ட் உத்தரவு

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;

Update: 2023-11-03 12:29 GMT

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், மனித உரிமை ஆணையத்தில் புலனாய்வுப் பிரிவு அறிக்கையின் அடிப்படையிலும், தமிழக அரசின் அறிக்கையின் அடிப்படையிலும் வழக்கை முடித்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து மதுரையை சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த மனுவில், தான் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு, மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது. கடந்த முறை, தேசிய மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதா? என பதில் அளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு இன்று, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, உயர் நீதிமன்றத்தில் இருந்து பெற்ற அறிக்கை தவிர, தேசிய மனித உரிமை ஆணையத்திடம் இருந்து அறிக்கை ஏதும் கிடைக்கப்பெறவில்லை என தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து மனுதாரர் ஹென்றி திபேன், மனித உரிமை ஆணைய சட்டப்படி, அறிக்கையை சம்பந்தப்பட்ட அரசுக்கும், புகார்தாரர்களுக்கும் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். மேலும், துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிபிஐ, தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திருமலை என்ற காவல் துறை அதிகாரியை மட்டும் வழக்கில் சேர்த்துள்ளதாக குறிப்பிட்டார்.

துப்பாக்கி சூடு குறித்து விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம், 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்ததாகவும், அந்த அறிக்கையை ஏற்று அரசாணை பிறப்பித்த தமிழக அரசு, அதன் அடிப்படையில் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து, நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 17 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags:    

Similar News