கள்ளக்குறிச்சி கலவர வழக்கு : 72 பேருக்கு ஜாமீன்

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் நிகழ்ந்த கலவர வழக்கில் கைதான 72 பேருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-08-09 11:43 GMT

சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் பள்ளியின் விடுதியில் தங்கி அவர் படித்து வந்த +2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13 ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.  அவர் தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து, மாணவியின் உறவினர்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மாதம் 17 ஆம் தேதி ஏராளமான இளைஞர்களும், அப்பகுதி மக்களும் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டம் கலவரமாக மாறி,  போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் 20க்கும் மேற்பட்ட பள்ளி பேருந்துகளை தீ வைத்து எரித்தனர். வகுப்பறைகள், அலுவலக அறைகள் என அனைத்தையும் சூறையாடி நாற்காலிகள் மேசைகளை அடித்து நொறுக்கினர்.

இதில் பள்ளியில் பயின்ற 4,500 மாணவர்களின் சான்றிதழ்களும் தீயில் எரிந்து சாம்பலாகின. பின்னர் உளவுத்துறை நடத்திய விசாரணையில், வாட்ஸப் குழுக்கள் மூலம் போராட்டக்காரர்கள் ஒன்று திரண்டதாகவும், இதில் சிலர் வேண்டுமென்றே வன்முறையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. 

இதனையடுத்து கலவரத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, வீடியோ பதிவுகள், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து இந்த கலவரம் தொடர்பாக 300-க்கும் மேற்பட்டோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் விசாரித்து வருகிறது.  கலவர வழக்கில் 300-க்கும் மேற்பட்டர் கைதான நிலையில் 50 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 72 பேருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் 174 பேரின் மனு மீதான நாளை விசாரணை நடைபெற உள்ளது.  

Tags:    

Similar News