பஞ்சு மிட்டாயா? நஞ்சு மிட்டாயா?: உஷார் ரிப்போர்ட்!
புதுச்சேரியைத் தொடர்ந்து சென்னையிலும் பஞ்சு மிட்டாயில் ரசாயனம் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது;
19ஆம் நூற்றாண்டில் இந்த பஞ்சு மிட்டாய்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போது இவை வெள்ளை நிறத்தில்தான் இருந்ததாகவும், இதன் தோற்றம் பஞ்சு போல இருந்ததால் பஞ்சு மிட்டாய் என பெயர் வைக்கப்பட்டதாகவும் நாளடைவில் குழந்தைகளைக் கவர இது பெரும்பாலும் இளஞ்சிவப்பு நிறத்திலும் பிறகு பல வண்ண நிறங்களிலும் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் பல விபரீத தின்பண்டங்களில் பஞ்சு மிட்டாய்க்கு முதலிடம் உண்டு .
எத்தனையோ ஆண்டுகளாக இது விற்பனையில் இருந்தாலும், எந்தவிதமான தர நிர்ணயமோ, உற்பத்திக் காலம், பயன்படுத்தும் பொருள்களின் அளவு அல்லது என்னென்ன என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லாமல், யார் வேண்டுமானாலும் பஞ்சு மிட்டாய்களை தயாரித்து விற்பனை செய்யலாம் என்கிற நிலைதான் நீடிக்கிறது.
அண்மையில், புதுச்சேரியில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், உணவில் சேர்க்கக் கூடாத, சேர்த்தால் நஞ்சாக மாறும் நிறமிகளைக் கொண்டு பஞ்சுமிட்டாய் தயாரித்து, அதனை வடமாநில இளைஞர்கள் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டபோதுதான், பஞ்சுமிட்டாய் எனப்படும் நஞ்சு மிட்டாய் குறித்த விபரீதம் பலருக்கும் புரிய வந்தது.
புதுச்சேரி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் விற்கப்படும் பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உருவாக்கக் கூடிய ரசாயனப் பொருள் கலந்திருப்பதாக உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில், புற்றுநோயை உண்டாக்கக்கூடிய ரோடமின்-பி என்ற ரசாயனம் கலந்திருப்பது தெரிய வந்தது. ரோடமின்-பி என்பது ஒரு வகை ரசாயனம். இது ஆடைகளில், காகிதங்களில் நிறத்தைக் கூட்ட பயன்படுத்தப்படுகிறது. இது விலை மிகவும் மலிவானது. ஆனால், உணவில் கலக்கப் பயன்படும் நிறமியின் விலை சற்று அதிகம். விலைக் குறைவு என்பதாலும் அதிகமாகத் தேவைப்படுவதாலும் பஞ்சு மிட்டாய் தயாரிக்க ரோடமின்-பி யை வாங்கி வடமாநில இளைஞர்கள் கும்பல் பஞ்சுமிட்டாய் தயாரித்து விற்பனை செய்துள்ளனர்.
பஞ்சு மிட்டாய்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், அவற்றை விற்ற வட மாநில இளைஞா்களிடம் விசாரணை நடத்தினா். சிலா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. புதுச்சேரியில் நடந்த சோதனையைத் தொடர்ந்து தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, சிலரை கைதும் செய்துள்ளனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல்லாவரத்தில் இயங்கி வந்த ஆலை ஒன்றிலிருந்துதான் அனைத்து பஞ்சுமிட்டாய்களும் வாங்கப்படுகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் அதன் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
இந்த பஞ்சு மிட்டாய்கள் குறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், ரோடமின்-பியை குழந்தைகளுக்கு பல்வேறு ஆபத்துகளை ஏற்படுத்தும். ஒவ்வாமை, உடலுறுப்பு சேதம் ஏற்படுவதோடு புற்றுநோய் கூட உண்டாகலாம்.
எனவே, பஞ்சு மிட்டாயில், இளஞ்சிவப்பு நிறத்தை சேர்ப்பதற்கு தடை விதிக்க உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிரம்காட்டி வருகிறார்கள். பஞ்சு மிட்டாயில் கலக்கப்படும் நிறமி, ரசாயனமா இல்லையா என்பதை பொதுமக்களால் கண்டறிய முடியாது என்பதால், நிறமற்ற பஞ்சுமிட்டாய்களை விற்பனை செய்ய வலியுறுத்தப்படுகிறது.
ஆனால், பஞ்சு மிட்டாய் விற்பனையாளர்களோ இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதன் நிறம்தான் விற்பனைக்கு முக்கிய காரணமாக நினைக்கிறார்கள். பஞ்சு மிட்டாய் என்பது வெறும் சர்க்கரையால் செய்யப்படுகறிது. அதில், நிறமூட்டியும், சற்று சுவையூட்டியும் சேர்க்கப்படுகிறது.
பல ஆண்டுகளாக தரமான பஞ்சு மிட்டாய் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருவோர் உணவுத் தரக்கட்டுப்பாட்டுத் துறையின் ஒப்புதல் பெற்ற நிறமிகளைப் பயன்படுத்தியே பஞ்சு மிட்டாய் தயாரிப்பதாகக் கூறுகிறார்கள்.
வெறும் சர்க்கரையால் தயாரிக்கப்படும் இந்த பஞ்சு மிட்டாய், நிறமி மட்டும் நஞ்சல்ல, இதன் சர்க்கரையே நஞ்சுதான் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.
பெரும்பாலும் நிறமில்லாத பஞ்சு மிட்டாய்களை பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுக்கலாம் என்றும் அறிவுரை வழங்குகிறார்கள் மருத்துவர்கள்.