கொரோனா ஊரடங்கு: பணிக்கு வராத நாட்களை பணிக்காலமாக அறிவிப்பு

கொரோனா ஊரடங்கு காலத்தில் பணிக்கு வராத நாட்களை பணிக்காலமாக தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.;

Update: 2023-02-18 15:30 GMT

பைல் படம்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராத நாட்களை பணிக்காலமாக அறிவிக்க அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்களின் விடுப்பு தொடர்பாக 11 வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசின் ஆணையங்கள், வாரியங்கள், நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், சங்கங்கள் உள்ளிட்டவற்றின் ஊழியர்களுக்கான வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், 10.05.2021 – 04.07.2021 ஊரடங்கு காலக்கட்டத்தில் அத்தியாவசியத் துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் பணியாற்றினர் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10.05.2021 க்கு முன்னர் விடுமுறைக்கு விண்ணப்பித்த அதிகாரிகள் மற்றும் ஊரடங்கு காரணமாக விடுப்புக் காலம் முடிந்தும் 04.07.2021 வரை பணியில் சேர முடியாதவர்களுக்கு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு ஊழியர் கொரோனா சிகிச்சையில் இருந்தால் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், வசிக்கும் இடம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் சிறப்பு தற்செயல் விடுப்பாகக் கருதப்படும். அரசு ஊழியர்களில் கர்ப்பிணிப் பெண்களுக்கு பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, மேற்கண்ட விலக்கு காலத்தை பணிக்காலமாக கருத வேண்டும்.

ஊரடங்கின்போது இணை நோய்கள், 55 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நோய்கள் உள்ள அரசு ஊழியர்கள், மருத்துவச் சான்றிதழைச் சமர்ப்பித்தால், பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படவதுடன், அது பணிக்காலமாக கருதப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தைப் பொறுத்த வரையில், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய், நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு விலக்கு அளிப்பது குறித்துத் முடிவு செய்யுமாறு துறைச் செயலர்களுக்கு தலைமைச்செயலாளர் ஆணையிட்டுள்ளார்.

Tags:    

Similar News