இபிஎஸ் மீதான முறைகேடு புகார் : விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதி
முக்கிய ஒப்பந்தங்களை வழங்குவதில், இபிஎஸ் தனது உறவினர்களுக்கு சாதகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.;
தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
அதிமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட 11 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளின் கட்டுமானப் பணிகளில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி, ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விரிவான விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடங்கள் கட்டுவதில் முறைகேடு நடந்ததாக, அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகத்துக்கு (டிவிஏசி) தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில், ஊழல் தடுப்பு இயக்குனகரத்திற்கு முதன்மையான ஆதாரங்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2017 – 21ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது பொதுப்பணித்துறை இலாகா வகித்தார். அப்போது, முக்கிய ஒப்பந்தங்களை வழங்குவதில், அவர் தனது உறவினர்களுக்கு சாதகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதிமுக ஆட்சியில் இருந்தபோது ஊழல் தடுப்பு இயக்குனரகம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக “கணிசமான ஆதாரம் இல்லை” என்று அறிக்கை சமர்ப்பித்தது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், அந்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
பொதுப்பணித்துறை வழக்கில், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாகப்பட்டினம், திருப்பூர் மற்றும் நீலகிரியில் மருத்துவக் கல்லூரி கட்டடங்கள் கட்டுவதில் அரசு ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பிறருக்கு எதிரான ஆதாரங்களை, ஊழல் தடுப்பு பிரிவு கண்டு பிடித்துள்ளது.
தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளை மீறி கட்டடங்கள் கட்டப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் சேர்ந்து கட்டிய 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் மொத்த மதிப்பு ரூ.4,080 கோடி ஆகும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.