ஹெல்மெட் அணியாமல் சென்ற காவலர்; அட்வைஸ் செய்தவருக்கு அர்ச்சனை
ஹெல்மெட் அணியாமல் சென்ற காவலரை, ஹெல்மெட் அணியுமாறு வலியுறுத்திய சமூக ஆர்வலரை அந்த காவலர் தகாத வார்த்தைகளில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்;
நியூ அவடி சாலையில் ஹெல்மெட் அணியாமல் காவலர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அவரை ஹெல்மெட் அணியுமாறு வலியுறுத்திய சமூக ஆர்வலரை, காவலர் தகாத வார்த்தைகளில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது.
அந்த காவலர் மதுரவாயல் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் கிருஷ்ணகுமார் என்பதும், ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக காவலர் கிருஷ்ணகுமாருக்கு அண்ணாநகர் போக்குவரத்து காவலர்கள் ரூ.100 அபராதம் விதித்துள்ளதும் தெரியவந்தது.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக சமூக ஆர்வலர் காசிமாயன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அக்டோபர் 7ஆம் தேதி நியூ ஆவடி சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றபோது அவ்வழியே ஹெல்மெட் அணியாமல் செல்போன் பேசியபடி, சென்ற காவலர் ஒருவரிடம் ஹெல்மெட் அணிந்து செல்லுமாறு கூறியதாகவும், அப்போது, அவர் தம்மைத் தகாத வார்த்தைகள் பேசியதாகவும் கூறினார்.
பின்னர், செல்போனில் வீடியோவை ஆன் செய்தபடி மீண்டும் அண்ணா நகர் ஆர்.டி.ஓ அலுவலகம் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது, வழியில் அந்த காவலர் வழிமறித்து 'நான் ஹெல்மெட் போடாமல் போவதில் உனக்கு என்ன பிரச்னைய?' என வாக்குவாதம் செய்து தகாத வார்த்தைகளில் திட்டியதாக கூறினார்
நல்லெண்ணத்துடன் ஹெல்மெட் அணியச் சொன்னதை புரிந்து கொள்ளாமல், பொது இடத்தில் வைத்து தன்னை தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டிய காவலர் கிருஷ்ணகுமார் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்ற வாசகத்திற்கு ஏற்ப பொதுமக்களிடம் எப்படி கண்ணியமாக நடந்துகொள்வது குறித்து உயர் அலுவலர்கள் காவல்துறையினருக்கு கற்றுத்தர வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
காவலர் கிருஷ்ணகுமார் கடந்த ஜூலை மாதம் போரூர் சுங்கச் சாவடி அருகே காரில் பேசிக்கொண்டிருந்த ஜோடிகளை மிரட்டி, பின் அங்கிருந்த இளம் பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கி, அவரை இரவு நேரத்தில் தொடர்புகொண்டு தகாத முறையில் பேசியதாக சர்ச்சையில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்குப்பெட்டிகளை வைத்திருந்த கல்லூரியில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் கிருஷ்ணகுமார், ஓய்வறையில் மற்றொரு காவலருடன் குடிபோதையில் தகாத வார்த்தைகள் பேசி தாக்கிக்கொண்ட சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.