திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர்

திருச்சி உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர் ஆகி உள்ளனர்.

Update: 2024-04-25 09:23 GMT

மணல் கொள்ளை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவின் பேரில், திருச்சி, தஞ்சை, கரூர், அரியலூர், வேலூர் மாவட்ட ஆட்சியர்கள் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு நேரில் ஆஜராகினார்கள்.

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட, கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள், சட்டவிரோத பண பரிமாற்றம் சட்டத்தின் கீழ் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி ஒரே நேரத்தில் 34 இடங்களில் சோதனை நடத்தினர். 2 நாட்களுக்கு மேலாக இந்த சோதனை நடந்தது. இதில், மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் வீடுகளில் இருந்து கணக்கில் வராத பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ரூ.12.82 கோடி ரொக்க பணம், ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 1024 கிராம் தங்கம் நகைகளை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சில மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திலகம் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.

இதன்படி, நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா அமலாக்கத்துறை அலுவலகத்தில் சில முக்கிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகினர். எனினும், அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்து ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்படாத, சாட்சியாக சேர்க்கப்படாத நிலையில், மாவட்ட ஆட்சியர்களை விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்ப முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது. மாநில அரசின் அனுமதியில்லாமல் அமலாக்கத் துறை மேற்கொள்ளும் இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும், மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல் முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தோடு, அமலாக்கத்துறை சம்மனுக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் உத்தரவின் பேரில் 5 மாவட்ட ஆட்சியர்களும் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினர். திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு, அரியலூர் மாவட்ட ஆட்சியர் மேரி ஸ்வர்ணா, வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஆகியோர் உரிய  ஆவணங்களுடன் இன்று சென்னையில் உள்ள அமலாக்க துறை அதிகாரிகள் முன் ஆஜர் ஆனார்கள். 

மணல் கொள்ளை விவகாரத்தில் ஐந்து  மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜர் ஆகி இருப்பதும்,  அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்துவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News