ஆசிய அளவிலான தடகள போட்டிக்கு கோவை மாணவர் தேர்வு

18-வது தேசிய அளவிலான போட்டியில் யோகேஸ்வர் 2-வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் பெற்றார்.

Update: 2023-03-11 11:30 GMT

யோகேஸ்வர்.

கோவை குனியமுத்தூர் நரசிம்மபுரம் மேட்டுக்காட்டை சேர்ந்தவர் யோகேஸ்வர். இவர் கர்நாடக மாநிலம் உடுப்பியில் நடந்த 18-வது தேசிய அளவிலான போட்டியில் யோகேஸ்வர் 2-வது இடம் பிடித்து வெள்ளி பதக்கம் பெற்றார். இதில் அவர் 8 நிமிடம் 36 வினாடிகளில் கடந்து வெள்ளி பதக்கத்தை பெற்றார். அத்துடன் அவர் அடுத்த மாதம் 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை உஸ்பெஸ்கிதானில் நடைபெற உள்ள 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியன் இளையோர் அத்லெட்டிக் போட்டியில் விளையாடுவதற்கும் தகுதி பெற்றுள்ளார். ஆசிய விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றுள்ள அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆசிய போட்டிக்கு தகுதி பெற்றுள்ள யோகேஸ்வரின் பெற்றோர் ராஜசேகரன்- ராஜேஸ்வரி. ராஜசேகரன் கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். யோகேஸ்வர் குனியமுத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 6 ஆண்டுகளாக ஓட்டப்பந்தய பயற்சி பெற்று வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு திண்டுக்கல்லில் நடைபெற்ற 16 வயதுக்குட் பட்டோருக்கான மாநில அளவிலான ஒட்டப்பந்தய போட்டியில் பங்கேற்றார். இதில் 2000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற் அவர் முதல் இடம் பிடித்து தங்க பதக்கம் வென்றார். இதனை தொடர்ந்து கிருஷ்ணகிரியில் நடந்த மாநில அளவிலான போட்டியிலும் தங்க பதக்கம் பெற்றார்.

தொடர்ந்து பள்ளிகள் அளவில் நடைபெறும் மாநில அளவிலான 17 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியிலும் பங்கேற்று 1 தங்கம், 2 வெள்ளி பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். அதிலும் 3000 மீட்டர் பந்தயத்தில் 9 நிமிடம் 7 வினாடியே சாதனையாக இருந்தது. அதனை 9 நிமிடம் 1 வினாடியில் கடந்து யோகேஸ்வர் புதிய சாதனை படைத்தார். திருவண்ணாமலையில் நடந்த 18 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான போட்டியில் வெள்ளி பதக்கமும், குண்டூரில் நடந்த தென்மாநில அளவிலான போட்டியில் வெள்ளி, அசாமில் நடந்த தேசிய அளவிலான போட்டிகளில் 11-வது இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

Tags:    

Similar News