கோவை ஜமேஷா முபின் இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடையவனின் கூட்டாளி

கோவை கார் குண்டு வெடிப்பில் இறந்த ஜமேஷா முபின் இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடையவனின் கூட்டாளி என தெரிய வந்துள்ளது.

Update: 2022-10-25 12:25 GMT

கோவை மாநகரின் இதயம் போன்று  அமைந்துள்ள உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் கடந்த23-ந் தேதி அதிகாலை காரில் இருந்த சிலிண்டர் வெடித்து மிகப்பெரிய அளவில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் அதில் இருந்த ஒருவர் பலியானார். அவர் யார் என உனடியாக தெரியவில்லை.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு விமானம் மூலம் கோவைக்கு விரைந்து வந்து  விசாரணை நடத்தினார்.

கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து துப்பு துலக்க 6 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். இந்த நிலையில், சிலிண்டர் வெடித்து இறந்தவர் ஜமேஷா முபின் (வயது 29) என தெரியவந்தது. இதையடுத்து அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு  தயாரிக்க பயன்படுத்தும் மூலப் பொருட்கள் சிக்கின. மேலும் அவரது வீட்டின் அருகில் இருந்த சி.சி.டி.வி .கேமரா பதிவுகளை  ஆய்வு செய்தபோது அதில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. சம்பவம் நிகழ்ந்த அன்று இரவு வீட்டில் இருந்து ஜமேஷா முபின் உள்ளிட்ட 5 பேர் வெள்ளை நிறத்திலான மர்ம பொருட்களை வெளியே எடுத்துச் சென்றது தெரிய வந்தது.


அவர்கள்  உக்கடத்தைச் சேர்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), ஜி.எம்.நகரைச் சேர்ந்த முகமது ரியாஸ் (27), பிரோஸ் இஸ்மாயில் (27) மற்றும் முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகிய 5 பேர் என தெரியவந்தது. அவர்கள் ஐந்து பேரையும் கோவை மாநகர போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை ரகசிய இடத்தில் வைத்து ஜமேஷா முபின் வீட்டில் இருந்து எடுத்து சென்ற பொருள் என்ன? எதற்காக எடுத்து சென்றீர்கள்? தீபாவளி பண்டிகையை சீர்குலைக்க திட்டம் தீட்டப்பட்டதா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்தனர்.

இதற்கிடையே கார் வெடித்த விபத்தில் பலியான ஜமேஷா முபின் கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கை தேவாலய குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைதாகி கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் விய்யூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகமது அசாருதீன் என்பவரை சில மாதங்களுக்கு முன்பு சந்தித்ததாகவும் தெரியவந்தது .

எனவே இதுபற்றி உயர்மட்ட உளவுத்துறை அதிகாரிகள் தீவிர புலன் விசாரணை நடத்தினார்கள். இதில் கோவை ரெயில் நிலையம், கோவை கலெக்டர் அலுவலகம், மாநகர போலீஷ் கமிஷனர் அலுவலகம் மற்றும் ரேஸ்கோர்ஸ் பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கார் வெடித்த விபத்தில் பலியான ஜமேஷா  முபின் தனது மொபைல் போனின் வாட்ஸ் அப்பில் "எனது மரணம் குறித்த செய்தி உங்களுக்குத் தெரிந்தால், என் தவறுகளை மன்னிக்கவும், என் குறைகளை மறைக்கவும், ஜனாசாவில் பங்கேற்று எனக்காகப் பிரார்த்தனை செய்யவும்" என்று எழுதி வைத்திருந்திருக்கிறார். பொதுவாக இதுபோன்று தற்கொலை படையினர் தான் எழுதி வைப்பது வழக்கமாகும். எனவே ஜமேஷா முபின் தற்கொலை படை தாக்குதல் கும்பலுடன் தொடர்புடைய தீவிரவாதியாக இருக்கலாம் என்ற முடிவிற்கு கோவை போலீசார் வந்துள்ளனர்.

எனவே  இந்த கார் சிலிண்டர் வெடிப்பு விசாரணையை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அமைப்பிடம் ஒப்படைப்பது குறித்து போலீஸ் அதிகாரிகள் இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர். கோவை கார் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகை அன்று கிறிஸ்தவ தேவாலயத்தில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் பயங்கர தாக்குதல் நடத்தினார்கள். கார் வெடிகுண்டு மூலம் நடத்தப்பட்ட இந்த தற்கொலை படை தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் இலங்கையையே உலுக்கியது. இலங்கையில் நடைபெற்ற இந்த கார் வெடிகுண்டு தாக்குதல் பின்னணியில் ஜக்ரன் ஹசீம் என்ற பயங்கரவாதிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஜக்ரன் ஹசீமுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது இந்தியாவின் தென்மாநிலங்களில் நிறைய பேரிடம் அவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி இருப்பது தெரியவந்தது. குறிப்பாக முகமது அசாருதீன் என்பவருடன் அவர் அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு பேசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முகமது அசாருதீன் தற்போது கேரளாவில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே முகமது அசாருதீனுடன் தற்போது இந்தியாவில் யார் யார் தொடர்பில் இருக்கிறார்கள் என்பது தொடர்பாக அவரது செல்போன் உரையாடலை வைத்து போலீசார் பட்டியல் தயாரித்தனர்.

அப்போது கோவையில் தற்போது நடந்த கார் குண்டு வெடிப்பில் பலியான ஜமேஷா முபின், முகமது அசாருதீனுடன் நெருங்கிய கூட்டாளியாக இருந்தது தெரியவந்தது. அதனால் தான்  2019-ம் ஆண்டு இதுகுறித்த சந்தேகத்தின் பேரில் ஜமேஷா முபினை என்.ஐ.ஏ. அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரை விடுவித்துள்ளனர். ஆனாலும் அவர் மீது சந்தேகம் இருந்ததால் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் தான் ஜமேஷா முபின் கோவையில் கார் குண்டு தாக்குதல் நடத்தி உள்ளது தெரியவந்தது.

ஜமேஷா முபின் ஏற்கனவே ஒருமுறை கார் குண்டு தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி இருந்தான். அதை செயல்படுத்த முயன்ற போது போலீஸ் கெடுபிடி காரணமாக அவனால் நிறைவேற்ற முடியவில்லை. இந்த நிலையில் அவன் 2-வது முறையாக தாக்குதல் நடத்த திட்டமிட்டு காரை ஓட்டி வந்துள்ளான். ஆனால் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் காரில் வந்து கொண்டிருந்தபோதே அது வெடித்து சிதறியதால் அவன் பலியானான். இதனால் அவனது முயற்சி தோல்வியில் முடிந்தது. வெடித்து சிதறிய காரில் 2 சிலிண்டர்கள் இருந்தன.

இதேபாணியில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் தான் இலங்கையில் 250-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். எனவே கோவையிலும் 100-க்கும் மேற்பட்டவர்களை கொல்லும் நோக்கத்திலேயே அவன் கார் ஓட்டி வந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஜமேஷா முபின் ஓட்டி வந்த கார் முழுக்க முழுக்க பெட்ரோலில் இயங்கக் கூடிய கார். எனவே அதை வெடிக்க வைக்கும் நோக்கத்திலேயே 2 சிலிண்டர்களை ஏற்றி வந்ததும் தெரியவந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஜமேஷா முபினும், முகமது அசாருதீனும் சேர்ந்து கோவையில் எந்தெந்த பகுதிகளில் தாக்குதல் நடத்தலாம் என்று திட்டமிட்டுள்ளனர். எனவே இப்போது நடந்த தாக்குதலை ஜமேஷா முபின் மட்டும் நடத்தி இருக்க முடியாது. இதன் பின்னணியில் சிலர் இருக்கலாம் என்றும் போலீசார் யூகிக்கிறார்கள். அவர்கள் கோவையில் வெவ்வேறு பகுதிகளில் பதுங்கி இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதியுடன் ஜமேஷா முபின் பழகி உள்ள நிலையில் அவனது பின்னணி பற்றியும் வெளியாகி உள்ள தகவல்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News