பற்ற வைக்காமலேயே எரியும் நிலக்கரி: என்ன செய்ய போகிறது மத்திய அரசு?

தமிழகத்தில் பற்ற வைக்காமலேயே எரிகிறது நிலக்கரி. இதனால் என்ன செய்ய போகிறது மத்திய அரசு என்ற கேள்வி எழுந்துள்ளது.

Update: 2023-04-06 16:13 GMT

நிலக்கரி  சுரங்கம் (கோப்பு படம்)

தமிழகத்தில் பற்ற வைக்காமலேயே எரிகிறது நிலக்கரி சுரங்க பிரச்சினை. இதில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதுதான் இப்போது தமிழ் மக்களின் கேள்வியாகும்.

தமிழகத்தின்  காவிரி டெல்டா பாசன பகுதிகளான தஞ்சை மாவட்டம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகள் அரியலூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிராக இந்த மாவட்டங்களின் விவசாயிகள் நீண்ட நெடும் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக அந்த திட்டம் தற்காலிகமாக கிடப்பில் போடப்பட்டது.

குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் அகில இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் வகையில் மாதக்கணக்கில் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் மற்றும் மா, பலா என பூத்துக் குலுங்கும் அந்த நிலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கிறோம், மீத்தேன் எடுக்கிறோம் என்ற பெயரில் விவசாயிகளின் வாழ்வுக்கு மங்களம் பாடும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இப்ப போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தனர். இதன் காரணமாக அப்போதிருந்த அ.தி.மு.க. அரசு கொடுத்த அழுத்தம், விவசாயிகளின் போராட்டம் காரணமாக மத்திய அரசு திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது .

ஆனால் இப்போது மீண்டும் ஏற்கனவே அறிவிக்க பட்ட அதே இடங்களில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான டெண்டரை மத்திய அரசு திடீரென அறிவித்துவிட்டது. இந்த அறிவிப்பு விவசாயிகளிடம் மீண்டும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் தமிழக அரசியல் கட்சிகளும் குறிப்பாக ஆளுங்கட்சியான தி.மு.க.வும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் மீண்டும் தங்களுக்குள் நிலக்கரி பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டு லாவணிக் கச்சேரி பாட ஆரம்பித்து விட்டார்கள்.

முதல்வர் ஸ்டாலின்.

2006 முதல் 2011 வரையிலான தி.மு.க. ஆட்சியில் தான் தமிழகத்தின் டெல்டா மாவட்ட பகுதிகளில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது அப்போதைய முதல்வர் கருணாநிதி தான் என்று அ.தி.மு.க. தரப்பில் ஏற்கனவே குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அன்று அந்த குற்றச்சாட்டை வைத்தவர் ஜெயலலிதா. இப்போது அந்த குற்றச்சாட்டுக்கு உயிர் ஊட்டி வருபவர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் தி.மு.க.வின் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அ.தி.மு.க. ஆட்சியில் தான் இருந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது எனவே இதற்கு காரணம் அ.தி.மு.க. தான் என்று கூறியுள்ளார். சட்டசபையில் இதற்கு விளக்கம் அளித்து பேசிய முதல்வர் மு. க. ஸ்டாலின் நானும் டெல்டா மாவட்டத்து காரன் தான். எக்காரணம் கொண்டும் டெல்டா மாவட்ட பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு அனுமதி அளிக்க விடமாட்டோம் என்று உறுதி அளித்திருக்கிறார். அத்துடன் பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி. ஆர். பாலு மூலம் சம்பந்தப்பட்ட மத்திய மந்திரியை நேரில் சந்தித்து வலியுறுத்தவும் கட்டளையிட்டு இருக்கிறார்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.

இது ஒரு புறம் இருக்க எடப்பாடி பழனிசாமியோ நிலக்கரி சுரங்க பிரச்சனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்பிக்கள் தான் குரல் எழுப்ப வேண்டும் என்று பேட்டி அளித்துள்ளார். 2006 முதல் 2011 வரை ஆட்சியில் இருந்த தி.மு.க. தான் மீத்தேன் எடுப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது திமுக ஆட்சியில் தான். விவசாயிகளை பாதிக்கக்கூடிய இப்படிப்பட்ட திட்டத்திற்கு கதவு திறந்து விட்டவர்கள் திமுகவினர் தான். அதிலிருந்து தான் தற்போது வரையிலான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.அ.தி.மு.க. ஆட்சியில் தான் தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய தி.மு.க. அரசு அதனை பாதுகாக்க தவறிவிட்டது என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

இப்படி தமிழகத்தில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகிறார்கள். அன்று கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஒருவரை ஒருவர் மாறி மாறி வசை பாடி வந்தார்கள். இப்போது ஸ்டாலினும், எடப்பாடி பழனிசாமியும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி வருகிறார்கள். குற்றச்சாட்டு ஒன்று தான் குற்றம்நாட்டும் நபர்கள் தான் மாறி உள்ளனர்.

மேலும் இந்த பிரச்சினையில் தி.மு.க. அ.தி.மு.க. உள்பட அனைத்து கட்சிகளும் மத்திய அரசுக்கு எதிராக களமாட தொடங்கி இருக்கிறார்கள்.அந்த வகையில் யாரும் பற்ற வைக்காமலேயே தமிழகத்தில் நிலக்கரி சுரங்க பிரச்சினை தீப்பிடித்து எரிய தொடங்கிவிட்டது.

இவ்வளவு பிரச்சனைக்கும் காரணமான மத்திய அரசு இதில் இதுவரை எந்த ஒரு பதிலையும் அளிக்கவில்லை. தமிழகத்தில் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது நிச்சயமாக நாடாளுமன்ற தேர்தலில் இந்த பிரச்சனையை தமிழக அரசியல் கட்சிகள் முக்கிய ஒரு பிரச்சினையாக எடுத்து வைப்பார்கள். அதனை தீர்ப்பதற்கு மத்திய அரசு என்ன பதில் அளிக்கப் போகிறது என தெரியவில்லை. அந்த வகையில் மத்திய அரசின் பதில் என்ன என்பதுதான் தமிழக மக்களின் குறிப்பாக விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. தற்காலிகமாக ஏதாவது ஒரு சாக்கு போக்கு சொல்லி பிரச்சனையை தீர்த்து வைக்க இயலுமா அல்லது நிரந்தர தீர்வுக்கு வழிவகுக்குமா? என தெரியவில்லை.

Tags:    

Similar News