ஃபோனில் பேசிய ரஜினி... நெகிழ்ந்து போன ஸ்டாலின்: காரணம் இதுதான்!
'உங்களில் ஒருவன்' நூலை படித்து தொலைபேசியில் பாராட்டிய ரஜினிகாந்துக்கு, முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது சிறுவயது காலம், கல்லூரி காலம் அரசியலில் நுழைந்தது, கலைத்துறை அனுபவம், மிசா நடவடிக்கையில் சிறை சென்ற அனுபவம் உள்ளிட்ட அனுபவங்களை, சுயசரிதையாக எழுதி உள்ளார்.
இந்த நூல், 'உங்களில் ஒருவன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புத்தகத்தின் முதல் பாகம் கடந்த மாதம் 28 ஆம் தேதி, சென்னையில் ராகுல் காந்தி வெளியிட்டார். இந்த நூலை, நடிகர் ரஜினிகாந்த் படித்துவிட்டு, முதலமைச்சர் ஸ்டாலினை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெகுவாக பாராட்டினார்.
இந்த நிலையில், பாராட்டு தெரிவித்த நடிகர் ரஜினிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பதிவில், "'உங்களில் ஒருவன்' படித்துவிட்டு, தொலைபேசியில் பாராட்டிய நண்பர் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி!
உங்களது வாழ்த்தின் ஒவ்வொரு சொல்லும் எனக்கு மகிழ்ச்சியை மட்டுமல்ல; இன்னும் இன்னும் இந்த நாட்டு மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கிறது!" என, நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.