கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை
5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்;
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவரும், இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவருமாக திகழ்ந்தவர் கருணாநிதி. இவர் 1924 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி பிறந்தார். இந்த ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி முதல் கருணாநிதி நூற்றாண்டு விழா தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி வரை இந்த நூற்றாண்டு விழாவை கொண்டாட திட்டமிடப்பட்டு இருக்கிறது அரசு.
இந்த நிலையில் கருணாநிதியின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்டு 7 ஆம் தேதி அவர் காலமானார். அவர் மறைந்து இன்றோடு 5 ஆண்டுகள் நிறைவடைகின்றது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் கருணாநிதியின் 5 வது ஆண்டு நினைவு தினத்தை திமுகவினர் கடைபிடிக்கவுள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.
ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலையில் இருந்து நினைவிடம் வரை அமைதி பேரணி நடைபெற்றது. அமைதி பேரணியில் அமைச்சர்கள், தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் பங்கேற்றனர்.
பேரணியில் ஏராளமான தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் 1 கி.மீ. தூரம் அமைதி பேரணியாக சென்று, மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தி.மு.க. எம்.பி. கனிமொழி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதன் தொடர்ச்சியாக கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீடு மற்றும் சிஐடி காலனியில் இருக்கும் அவரது வீட்டுக்கு சென்று முதல்வர் முக ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார்.