ஆறு ஜவுளி பூங்காக்களுக்கு திட்ட ஒப்புதல் அரசாணை

ஆறு ஜவுளி பூங்காக்களுக்கு திட்ட ஒப்புதல் அரசாணையும், 17 தொழில் நிறுவனங்களுக்கு மானியமும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

Update: 2024-01-23 04:13 GMT

கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில், சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா திட்டத்தின் கீழ் 6 சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்களுக்கு திட்ட ஒப்புதல் அரசாணைகளையும், ஜவுளி தொழில் முனைவோர்களுக்கான அரசு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 17 தொழில் நிறுவனங்களுக்கு 10 விழுக்காடு கூடுதல் மூலதன முதலீடு மானியத் தொகையாக 9.25 கோடி ரூபாய்க்கான காசோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “நூல் உற்பத்தி மற்றும் பின்னலாடைத் தொழிலில் முதல் இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டினை, இந்தியாவின் சிறந்த வணிகத் தளமாக நிலைநிறுத்திட வேண்டும் என்ற உயரிய நோக்கிலும், அதிகமான தொழில் முதலீட்டினை ஈர்த்து அதன்மூலம் நீடித்த பொருளாதார வளர்ச்சியினை அடைந்திடவும், சிறிய அளவிலான தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதன் மூலம் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா திட்டம் 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட போதிலும் திட்ட வழிமுறைகளில் இருந்த இடர்பாடுகள் காரணமாக தமிழ்நாட்டில் யாரும் ஜவுளிப்பூங்கா அமைக்க முன்வரவில்லை. இந்த இடர்பாடுகளை களையும் வகையில் சிறு மற்றும் நடுத்தர ஜவுளி தொழில்முனைவோர்கள் ஜவுளி பூங்காக்கள் அமைக்கும் வழிமுறைகளை எளிதாக்கும் பொருட்டு, சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா திட்டத்திற்கான நிபந்தனைகளை தளர்த்தி 2022-ஆம் ஆண்டில் இவ்வரசு ஆணையிட்டது.

அதன்படி, தற்போது சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா திட்டத்தின் கீழ், 2 ஏக்கர் நிலத்தில் குறைந்தபட்சம் 3 உற்பத்தி நிறுவனங்கள் நிறுவப்பட வேண்டும் என்றும், இதற்கென உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழிற்சாலை கட்டடங்கள் அமைக்க தகுதியான திட்ட மதிப்பீட்டில் 50 விழுக்காடு (அதிகபட்சமாக ரூ.2.50 கோடி) வரை மானியமாக தமிழ்நாடு அரசு வழங்கிடவும் ஆணையிட்டுள்ளது. இதன் காரணமாக, சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்களை அமைப்பதற்கு ஜவுளித் தொழில்முனைவோர் அதிக அளவில் ஆர்வத்துடன் முன்வந்துள்ளனர்.

சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் திட்டத்தின் கீழ், திருவள்ளூர்-திருப்பதி மினி டெக்ஸ்டைல் பார்க், தர்மபுரி-பாரத் மினிடெக்ஸ்டைல் பார்க், கரூர்-VMD மினிடெக்ஸ்டைல் பார்க், திருப்பூர்-கார்த்திகேயா வீவிங் பார்க், கரூர்- ஸ்ரீ பிரனவ் மினிடெக்ஸ்டைல் பார்க், கரூர்-நாச்சி மினிடெக்ஸ்டைல் பார்க் ஆகிய 6 சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்களுக்கு, திட்ட செயலாக்கத்திற்கான மொத்த மானியத் தொகை 13.75 கோடி ரூபாயில், முதற்கட்டமாக 5 கோடி ரூபாய் ஒப்பளிப்பு செய்து அதற்கான திட்ட ஒப்புதல் அரசாணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் மினி டெக்ஸ்டைல் பார்க் நிர்வாகிகளிடம் வழங்கினார்.

இதன்மூலம், சிறு மற்றும் நடுத்தர-ஜவுளி தொழில்முனைவோர்கள் பயன்பெறுவதோடு சுமார் 1200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஒரு பூங்காவில் ஆண்டுக்கு 24 லட்சம் மீட்டர் உற்பத்தி வீதம் 6 பூங்காக்களில் 144 லட்சம் மீட்டர் அளவிற்கு துணி வகைகள் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் கைத்தறி, விசைத்தறி, நூற்பு, பதனிடுதல் உள்ளிட்ட பிரிவுகளில் நவீன, ஒருங்கிணைந்த மற்றும் உலகத் தரம் வாய்ந்த ஜவுளித் துறையை உருவாக்கவும், உள்நாட்டு சந்தை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதிக்காகவும் உற்பத்தி செலவைக் குறைத்து, உயர்தர ஜவுளி ஆடைகள் உற்பத்தி செய்யவும், புதுமை, பன்முகத்தன்மை, மதிப்பு கூட்டல் ஆகியவற்றில் அதிக முக்கியத்துவம் அளித்து ஜவுளித்துறையை ஊக்குவிக்கவும், ஜவுளித் தொழில் முனைவோர்களுக்கு அரசு மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஜவுளித் தொழில் முனைவோர்கள் தங்களது நிறுவனங்களில் செய்துள்ள முதலீட்டில் 10 விழுக்காடு கூடுதல் மூலதன முதலீடு மானியத் தொகை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஜவுளித் தொழில் முனைவோர்களுக்கான முதலீட்டு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக 17 ஜவுளி நிறுவனங்களுக்கு 10 விழுக்காடு கூடுதல் மூலதன முதலீடு மானியத் தொகை 9.25 கோடி ரூபாய் வழங்கிடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று 5 நிறுவனங்களுக்கு மானியத் தொகை 5.33 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News