வெங்கையா நாயுடுவுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினார்;
குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் . வெங்கையா நாயுடுவின் பிறந்த நாளை ஒட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஏராளமானோர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் தங்கியுள்ள குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை நேரில் சந்தித்து முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
ஆளுநர் மாளிகையில் குடியரசுத் துணைத் தலைவரை சந்தித்து, பொன்னாடை அணிவித்து, புத்தகம் வழங்கி, பிறந்தநாள் வாழ்த்துகளை கூறினார்.
முன்னதாக அவர் ட்விட்டரில், நீங்கள் இன்னும் பல்லாண்டு காலம் நம் நாட்டிற்கு சேவை செய்ய வாழ்த்துகிறேன். எந்தவொரு சூழ்நிலையிலும் நேர்மை, விவேகம் மற்றும் நகைச்சுவையின் சாயல் ஆகியவை பொது வாழ்க்கையில் உள்ள அனைவருக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்டுள்ளார்.