பிரதமருக்கு தமிழக பாரம்பரிய சிறுதானிய, நெல் வகைகளை பரிசளித்த முதல்வர்
பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதல்வர் தமிழ்நாட்டின் பாரம்பரிய சிறுதானிய மற்றும் நெல் வகைகளையும் நினைவு பரிசாக வழங்கினார்
அரசு முறை பயணமாக நேற்று இரவு தலைநகர் டெல்லி வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று காலையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து புதிதாக பதவியேற்றுள்ளதற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்தார். சுமார் 20 நிமிடங்கள் நடந்த அந்த சந்திப்பின் போது தனது அழைப்பை ஏற்று "செஸ் ஒலிம்பியாட்-2022" துவக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றதற்கு நன்றி தெரிவித்து கொண்டார்.
மேலும், தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது, காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதியளிக்க கூடாது, முல்லை பெரியாறு அணை பகுதியில் புதிய அணைக்கட்ட அனுமதி வழங்க கூடாது, நிதி தேவையை பூர்த்தி செய்வது மற்றும்மத்திய அரசின் நிதியுடன் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை விரைந்து வழங்க வேண்டும் போன்ற கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
பிரதமரை சந்தித்தபோது, மாமல்லபுரத்தில் நடைபெற்ற 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியினுடைய முக்கிய நிகழ்வுகள் பற்றிய தொகுப்பு நூலையும், தமிழ்நாட்டின் பாரம்பரிய சிறுதானிய மற்றும் நெல் வகைகளையும் முதல்வர் ஸ்டாலின் நினைவு பரிசாக வழங்கினார்.