மழையால் சேதமான பயிர்களுக்கு நிவாரணம் : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

டெல்டா மாவட்டங்களில் சேதமான பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

Update: 2023-02-06 07:49 GMT

முதலமைச்சர் ஸ்டாலின் 

பருவம் தவறிய மழையால் காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தன. டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அறிக்கை தருமாறு முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி காவிரி டெல்டாவில் அமைச்சர்கள் சக்கரபாணி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்து அறிக்கை அளித்தனர். இதையடுத்து டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களின் நிலை குறித்தும், இழப்பீடுகள் வழங்குவது குறித்து அமைச்சர்கள் குழுவுடன் முதலமைச்சர் .ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

அதன்பின், டெல்டா மாவட்டங்களில் சேதமான பயிர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நிவாரணத்தை அறிவித்தார். அதன்படி நிவாரணமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயிர் வகைகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.3000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள இனங்களில் ஹெக்டேருக்கு ரூ.20,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உளுந்து விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு 8 கிலோ பயிறு விதைகள் 50% மானியத்தில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News