முதல்வருடன் கருத்து மோதல்: சட்டசபையில் இருந்து பாதியில் வெளியேறினார் ஆளுநர் ரவி

முதல்வருடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக தமிழக சட்டசபையில் இருந்து ஆளுநர் ரவி பாதியில் வெளியேறினார்.

Update: 2023-01-09 06:40 GMT
தமிழக சட்டசபையில் இருந்து பாதியில் வெளியேறி சென்றார் ஆளுநர் ரவி.

தமிழக சட்டசபையில் 2023 ஆம் ஆண்டிற்கான முதல் கூட்டம் ஜனவரி 9-ம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. பொதுவாக சட்டசபை மரபுப்படி மாநில அரசின் முதல் சட்டசபை கூட்டத்தில் அம்மாநிலத்தின் ஆளுநர் பங்கேற்று உரையாற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு சபாநாயகர் முறைப்படி ஏற்கனவே அழைப்பு கொடுத்திருந்தார். கவர்னர் உரை தயாரிக்கப்பட்டு அவரிடம் அளிக்கப்பட்டு இருந்தது.அதற்கும் அவர் ஒப்புதல் அளித்தார். சட்டசபையின் முதல் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற இருப்பதற்கு ஆளுனர் ரவி இசைவும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தமிழக சட்டசபையின் 2023 ஆம் ஆண்டிற்கான முதல் சட்டசபை கூட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி இன்று காலை தொடங்கியது. தமிழக ஆளுநர் ரவி சட்டசபை வளாகத்திற்கு வந்தார். அப்போது அவருக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சட்டசபை அரங்கிற்குள் வந்த ஆளுநர் ரவி சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தார்.அவர் சபைக்குள் நுழைந்தபோது முதலமைச்சர் மு ‌க .ஸ்டாலின் அவருக்கு கை கூப்பி வணக்கம் தெரிவித்தார்.

இருக்கையில் சபாநாயகர் அமர்ந்ததும் தனது உரையை படிக்கத் தொடங்கினார். அவர் தான் கையில் எழுதி வைத்திருந்த ஒரு அறிக்கை போன்றதை பார்த்துக் கொண்டே தமிழில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம் என தமிழில் பேசி தனது உரையை தொடங்கினார்.பின்னர் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி எனக் கூறிய ஆளுநர் ரவி தமிழக மக்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்‌.

ஆளுநர் ரவி இவ்வாறு தமிழில் பேச தொடங்கிய போது தி.மு.க. கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் கவர்னரை கண்டிக்கிறோம் .ஆளுநரை திரும்ப பெறு என்பது போன்ற கோஷங்களை தொடர்ந்து எழுப்பி கொண்டே இருந்தார்கள் .ஆனாலும் ஆளுநர் ரவி தொடர்ந்து தனது தமிழ் அறிக்கையை வாசித்து முடித்த பின்னர் ஆங்கிலத்தில் தனது உரையை படிக்க தொடங்கினார். அப்போதும் தொடர்ந்து தி.மு.க.கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் சத்தம் போட்டுக் கொண்டிருந்தனர். ஆனாலும் ஆளுநர் ரவி அதை பொருட்படுத்தவில்லை.

ஆளுநர் ரவி பேசி முடித்ததும் முதலமைச்சர் மு .க ஸ்டாலின் பேசத் தொடங்கினார். அப்போது ஆளுநர் ரவி இந்த அரசு தயாரித்து அச்சிட்டு கொடுத்த உரையை ஆளுநர் முழுமையாக படிக்கவில்லை. திராவிட மாடல் என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தாமல் தவிர்த்து விட்டார். தமிழகம் அமைதி பூங்கா என்ற வார்த்தையையும் பயன்படுத்தவில்லை. மேலும் பெரியார், அண்ணா, அம்பேத்கர், காமராஜர் போன்ற தலைவர்களின் பெயரையும் அவர் உச்சரிக்கவில்லை. ஆளுநர் அரசின் அறிக்கையை படிக்காமல் தான்  சுயமாக தயாரித்து கொண்டு வந்திருந்த அறிக்கையை  படித்து இருப்பதால் அவருக்கு கண்டனம் தெரிவிப்பதாக முதலமைச்சர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

இப்படி முதல்வர் ஸ்டாலின்  தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது ஆளுநர் ரவி திடீர் என எழுந்து சட்டசபையை விட்டு வெளியேறினார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுவாக ஆளுநர் அறிக்கை வாசித்து முடித்த பின்னர் சபாநாயகர் அந்த அறிக்கையை தமிழில் படிப்பது வழக்கம். ஆனால் சபாநாயகர் தமிழில் படிப்பதற்கு முன்பாகவே முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஆளுநர் ரவியை கண்டித்து பேசியதோடு அவர் பேசிய வார்த்தைகள் அவை குறிப்பில் இடம் பெறாது என்று குறிப்பிட்டதால் ஆளுநர் முதலமைச்சரின் நடவடிக்கையில் அதிருப்தி அடைந்து வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தி.மு.க. அரசிற்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே கருத்து மோதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தி.மு.க.மற்றும் கூட்டணி கட்சியினர் தமிழகத்திற்கு விரோதமாக செயல்படும் ஆளுநர் ரவியை திரும்ப பெற வேண்டும் அவரை மாற்ற வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தை தமிழ்நாடு என்று குறிப்பிடாமல் தமிழகம் என்று கூறுவதே சரி என ஆளுநர் கூறியிருந்தார்.

இதற்கு கடும் கண்டனமும் எதிர்ப்புகளும் கிளம்பியது. இந்த சூழலில் சட்டசபையில் இன்று ஆளுநர் ரவி தனது உரையை படிக்கத் தொடங்கியபோது தமிழகம் என்றே குறிப்பிட்டார். இப்படி தி.மு.க.அரசிற்கும் ஆளுநர் ரவிக்கும் ஏற்பட்ட கருத்து மோதல் இன்று சட்டசபை வளாகத்தில்  பகிரங்கமாக வெடித்தது. இதன் காரணமாகவே ஆளுநர் ரவி அவையில் இருந்து பாதியில் வெளியேறியுள்ளார்.இந்த சம்பவம் தமிழக அரசியலில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News