திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை
வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 16ம் தேதி, மாட்டுப்பொங்கல் தினத்தன்று திருவள்ளுவர் நாள் கடைபிடிக்கப்படுகிறது. இன்று திருவள்ளுவர் தினத்தையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சிவசங்கர், போக்குவரத்துத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோரும், அதிகாரிகளும் உடனிருந்தனர்
இதனைத்தொடர்ந்து 2022 ஆம் ஆண்டிற்கான விருதுகளும் வழங்கப்பட உள்ளன. தமிழக அரசு சார்பில் இன்றைய தினம் 10 தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. மேலும் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தின் கீழ் 5 தொண்டு நிறுவனங்களுக்கு 20 கோடி ரூபாய் அளவில் நிதி உதவி வழங்கப்படும் திட்டத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், 2023 ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது இரணியன் நா.கு பொன்னுசாமிக்கு முதலமைச்சர் வழங்குகிறார்.
திராவிட கழக துணை தலைவர் பூங்குன்றனுக்கு, தந்தை பெரியார் விருது வழங்கப்பட்டது. மகாகவி பாரதியார் விருது முனைவர் ஆ.ரா.வெங்கடாசலபதிக்கு வழங்கப்பட்டது. திராவிட இயக்க எழுத்தாளர் வாலாஜா வல்லவனுக்கு - பாவேந்தர் பாரதிதாசன் விருதும், கி.ஆ.பெ.விசுவநாதம் விருது கவிஞர் மு.மேத்தாவுக்கும், திரு.வி.க விருது நாமக்கல் பொ. வேல்சாமிக்கும் வழங்கப்பட்டது.
எஸ்.டி. ராஜதுரைக்கு அம்பேத்கர் விருதும், முனைவர் மதிவாணனுக்கு தேவநேயப்பாவணர் விருதும், பெருந்தலைவர் காமராஜர் விருதை ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
2022 ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருது முன்னாள் அமைச்சர் தஞ்சை எஸ்.என்.எம்.உபயதுல்லாவுக்கு வழங்கப்பட்டது.