முதல்வர் ஸ்டாலின்- ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு நாளை எப்படி இருக்கும்?
முதல்வர் ஸ்டாலின்- ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு நாளை எப்படி இருக்கும்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.;
இந்தியா முழுவதும் ஜனவரி 26ம் தேதியான நாளைய தினம் குடியரசு தினவிழா மிக சிறப்பாக கொண்டாப்பட இருக்கிறது. நமது நாட்டில் ஆகஸ்டு 15ம் தேதி சுதந்திர தினத்தன்று நாடு முழுவதும் அந்தந்த மாநிலங்களில் மாநில முதல்வர்களும், குடியரசு தினத்தன்று மாநில தலைநகர்களில் மாநில ஆளுனர்களும் தேசிய கொடி ஏற்றுவது மரபாக இருந்து வருகிறது.
அந்த வகையில் நாளை சென்னையில் நடை பெற உள்ள குடியரசு தினவிழாவில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தேசிய கொடி ஏற்ற உள்ளார். இதற்கான சென்னை உழைப்பாளர் சிலை அருகே கொடி மேடை தயார் செய்யப்பட்டு உள்ளது. இந்த விழாவில் ஆளுநர் தேசிய கொடிஏற்றி காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். பின்னர் சிறப்பாக பணியாற்றியபோலீசாருக்கு பதக்கங்களையும் அணிவிக்கிறார்.
இந்த விழாவில் தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாாலின் பங்கேற்கிறார். மரபு படி இந்த விழாவில் முதலில் மாநில முதல் அமைச்சரும், அதனை தொடர்ந்து மாநில ஆளுநரும் வருகை தருவது வழக்கம். மாநில ஆளுநரை முதல்வர் வரவேற்று தலைமை செயலாளர் மற்றும் காவல் துறை அதிகாரிகளை அறிமுகம் செய்து வைப்பது வழக்கம்.
அந்த வகையில் நாளை முதலில் முதல்வர் ஸ்டாலின் விழா அரங்கிற்குள் வருவார்.அதனை தொடர்ந்து ஆளுநர் ரவி வந்த பின்னர் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்க வேண்டும்.
தமிழக சட்டமன்றத்தில் கடந்த 9ம் தேதி ஆளுநர் ரவி உரையின்போது அவருக்கும் முதல்வருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. ஆளுநர் ரவி, அரசு தயாரித்து கொடுத்த ஆளுநர் உரையின் சில பகுதிகளை வாசிக்காமல் விட்டு விட்டதாக கூறி அவருக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கண்டன தீர்மானத்தை முன்மொழிந்தார்.இதனால் அதிர்ச்சி அடைந்த ஆளுநர் தேசிய கீதம் பாடுவதற்கு முன்பாகவே சபையை விட்டு பாதியில் வெளியேறினார்.
ஆளுநரின் இந்த செயலுக்கு தி.மு.க. கூட்டணி கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். அவருக்கு எதிராக பல போராட்டங்களும் நடைபெற்றது. அதன் பின்னர் முதல்வர் ஸ்டாலினும், ஆளுநர் ரவியும் இதுவரை நேரில் சந்தித்து பேசிக்கொள்ளவில்லை. இந்த சூழலில் தான் நாளை குடியரசு தின விழாவில் முதல்வரும், ஆளுநரும் நேரில் சந்திக்க இருக்கிறார்கள்.
இந்த சந்திப்பு எப்படி இருக்கும்? மரபு படி அனைத்து சடங்குகளும் முறையாக நடக்குமா? அல்லது கடந்த 9ந்தேதி சட்டசபையில் நடந்தது போன்ற சம்பங்கள் எதுவும் நடக்குமா? என்பதை தெரிந்து கொள்ள நாளை காலை வரை காத்திருந்து தான் தீர வேண்டும். குடியரசு தினவிழாவில் ஆளுநர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தினை காங்கிரஸ் உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்து இருப்பதால் எதிர்பார்ப்பு பரபரப்பாக தான் உள்ளது.