ஆஸ்கர் விருது வென்ற கார்த்திகிக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கிய முதல்வர்
ஆஸ்கர் விருதை வென்ற ‘ தி எலிஃபெண்ட் விஸ்பரர்ஸ்’ படத்தின் இயக்குனர் கார்த்திகிக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
95-வது ஆஸ்கர் விருது விழாவில் தயாரிப்பாளர் குனீத் மோங்கா தயாரிப்பில் கார்த்திகி கொன்சால்வ் இயக்கத்தில் வெளியான ‘ தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணப்படம் சிறந்த ஆவணப்படத்துகான ஆஸ்கர் விருதை வென்றது. ஆவணப்பட வரிசையில் ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்திய ஆவணப்படம் என்ற சாதனையை தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படம் படைத்திருக்கிறது. இந்தப் படத்துக்கான ஆஸ்கர் விருதை தயாரிப்பாளர் குனீத் மோங்காவும் இயக்குனர் கார்த்திகி கொண்சால்வும் பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ஆஸ்கார் விருது பெற்ற உலக அளவில் தமிழ்நாட்டிற்கு பெருமை தேடித்தந்த “தி எலிஃபான்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப்படத்தின் இயக்குனர் கார்த்திகியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் உரிய ஊக்கத்தொகையாக 1 கோடி ரூபாய்க்கான காசோலையும், பாராட்டு சான்றிதலும் வழங்கினார் மேலும் கார்த்திகி கோன்சால்வ்ஸ்க்கு அன்பளிப்பாக திரைப்படத்தில் நடித்த யானையின் உருவச்சிலை வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திகி கொன்சால்வ், தமிழ்நாட்டுக்காக ஆஸ்கார் விருது வாங்கியது மிக மகிழ்ச்சியாக உள்ளது. பழங்குடியினர் வாழக்கூடிய பகுதியில் இந்த ஆவணப்படம் எடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு பெண்ணாக இருந்து இந்த ஆஸ்கார் விருதை வாங்கியது பெருமை அடைகிறேன் என்று தெரிவித்தார்.