சென்னையில் நாளை வணிக வர்த்தக வார விழா: தமிழக முதல்வர் பங்கேற்கிறார்
இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சகம் நடத்தும் வணிக வர்த்தக வார விழா தமிழகத்தின் பல பகுதிகளில் நடைபெறுகிறது.
இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சகம் பல்வேறு ஏற்றுமதி மேம்பாட்டு குழுக்களின் மூலம், நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வணிக மற்றும் வர்த்தக வார விழாவை விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்து வருகிறது. பொருளாதார வளர்ச்சி, ஏற்றுமதிகளை மேம்படுத்துதல் ஆகியவை இதன் நோக்கங்களாகும்.
நாளை (22.09.2021) காலை 11 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஊரகத் தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள், தமிழக அரசின் தலைமை செயலாளர், கூடுதல் செயலாளர் வணிகம் மற்றும் தொழில்கள் அமைச்சகம் (இந்திய அரசு), முதன்மை செயலாளர் தொழில்கள் (தமிழ்நாடு அரசு), வெளிநாட்டு வர்த்தக கூடுதல் தலைமை இயக்குனர் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் இதில் பங்கேற்பார்கள்.
பல்வேறு துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் தொழில்களின் வளர்ச்சியை மையமாகக் கொண்டும், ஏற்றுமதியில் மாநிலப் பங்கை கணிசமாக அதிகரிப்பதை இலக்காகக் கொண்டும், தமிழகத்தின் ஏற்றுமதி திறனை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது.
தோல் ஏற்றுமதி கவுன்சில், ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (EPCES), மெப்ஸ் உற்பத்தியாளர்கள் சங்கம் (MEPZMA), இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (FIEO), பிளாஸ்டிக் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் (PLEXCONCIL), தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனம் (NIFT), காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (FDDI), பொறியியல் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் (EEPC), முத்து & நகை ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் (GJEPC), ரசாயன மற்றும் தொடர்புடைய பொருட்கள் ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில் (CAPEXIL), ஏற்றுமதி கடன் உத்தரவாத நிறுவனம் (ECGC), மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (CLRI), தோல் துறை திறன் கவுன்சில் (LSSC), விவசாய மற்றும் செயல்முறை உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) மற்றும் ஹெச் டி எஃப் சி வங்கி உள்ளிட்ட வர்த்தக மற்றும் ஏற்றுமதி துறையை சேர்ந்த அமைப்புகள் பங்கேற்கின்றன.
மாநில அளவிலான நிகழ்ச்சியை தவிர, ஏற்றுமதியாளர்கள் மாநாடுகளும் பின்வரும் இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன:
(1) கோவை 23 செப்டம்பர்
(2) திருப்பூர் 24 செப்டம்பர்
(3) ஓசூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்) 24 செப்டம்பர்
(4) தூத்துக்குடி 24 செப்டம்பர்
(5) மதுரை 25 செப்டம்பர்