காலை சிற்றுண்டி திட்டத்தை மதுரையில் துவக்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை மதுரையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இந்த திட்டம் அண்ணா பிறந்த நாளான இன்றைய தினம் மதுரையில் துவக்கி வைக்கப்பட்டது. மதுரையில் இன்று காலை இத்திட்டத்தை துவக்கி வைத்த முதல் அமைச்சர் ஸ்டாலின் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டார்.
முதல் அமைச்சரின் காலை உணவு திட்டம் என்ற பெயரிலான இந்த திட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் மலையக பகுதிகளில் 1545 அரசு தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவ மாணவிகளுக்கு முதல் கட்டமாக காலை உணவு வழங்கப்படும். இதற்காக அரசு ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் 36, திருச்சி மாநகராட்சி 40, காஞ்சிபுரம் 20, தஞ்சாவூர் 21, கடலூர்15,வேலூர் 48, திருவள்ளூர் 6, தூத்துக்குடி 8, மதுரை26, சேலம் 54, கன்னியாகுமரி19, திண்டுக்கல் 14, நெல்லை 22, கோவை 62 என மொத்தம்381பள்ளிகளிலும், மற்றும் நகராட்சி பகுதிகளில் 163 கிராம பகுதிகளில் 728, மலைப்பகுதிகளில் 237 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவில் 50 கிராம் அரிசி அல்லது அதே அளவில் கோதுமை, ரவா, அல்லது சேமியாவுடன் பருப்பு,காய்கறிகள் என சேர்த்து சமைத்தபின் மொத்தம்150 முதல் 200 கிராம் அளவில் உணவு தரமாக இருக்கவேண்டும் என அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.