மகளிர் உரிமைத் திட்டத்தில் மகளிருக்கு வங்கி ஏடிஎம் கார்டுகள் வழங்கிய முதல்வர்

புதிய பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிருக்கு மகளிர் உரிமைத் திட்ட வங்கி பற்று அட்டைகளை(ATM Cards) முதல்வர் வழங்கினார்.

Update: 2023-11-10 07:21 GMT

புதிய பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிருக்கு  மகளிர் உரிமைத் திட்ட வங்கி பற்று அட்டைகளை(ATM Cards) முதல்வர் வழங்கினார்.

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற விழாவில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில், கள ஆய்வு நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பயனாளிகளான 7.35 இலட்சம் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கிடும் விதமாக 6 மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை (ATM Cards) வழங்கினார்.

தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், “மகளிருக்குச் சொத்துரிமையும், உள்ளாட்சி அமைப்புகளில் தனி இடஒதுக்கீடு அளித்தது முதல், தற்போது கட்டணமில்லாப் பேருந்து பயணம் வழங்கியது வரை, மகளிரின் நலன் காத்து அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதில் எப்போதும் அக்கறையுடன் இவ்வரசு செயல்பட்டு வருகிறது. அந்த வரிசையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்படும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் திட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டான இந்த ஆண்டில், திராவிட இயக்க மாதம் என சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில், தாய் தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் பெருமகன் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.

கடந்த 27.3.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முதல்வடர் அளித்த விளக்கத்தில், “மகளிர் உரிமைத் தொகைத் திட்டம்” இரண்டு நோக்கங்களைக் கொண்டது. பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. அடுத்து, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் அவர்கள் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதாகும்.

மகளிரின் சமூகப் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அறிவிக்கப்பட்டிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் என்பது, குடும்பத் தலைவிகளுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். இந்த மகத்தான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் ஏறத்தாழ ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிடும் வகையில் அமைந்திடும் என்றும் அறிவித்தார்.

சமுதாயத்தில் உள்ள விளிம்பு நிலை மக்களாகிய சாலையோரங்களில் குடியிருப்போர், பழங்குடியினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இதர ஆதரவற்றோர் இந்தத் திட்டத்தில் பயன் அடைவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும் என்றும், அவர்களிடம் குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்ற தரவுகள் இல்லையென்றாலும் கூட, அவற்றைப் பெறுவதற்கு உரிய வழிவகை செய்து, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அவர்களுக்குக் கிடைப்பதற்கு உதவி புரிய வேண்டும் என்றும், எந்தவொரு தகுதியான பயனாளியும் விடுபட்டுவிடக் கூடாது என்றும் முதல்வர், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களை அறிவுறுத்தி இருந்தார்.

தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமினை  அவர்  24.7.2023 அன்று தொடங்கி வைத்தார்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இணைந்து கொள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசிற்கு வந்தது. வந்தது. அவற்றில் தகுதியுள்ள 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டது.

பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த நாளான 15.9.2023 அன்று காஞ்சிபுரத்தில் தமிழக முதல்வர் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில், மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் தமிழ்நாட்டின் வரலாற்றில் மிகப் பெரிய திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

புதிய பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் உரிமைத் தொகை வழங்குதல்

கலைஞர் உரிமைத் திட்டத்தின் கீழ் முகாம்களில் விண்ணப்பித்து கள ஆய்வு நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 7.35 இலட்சம் புதிய பயனாளிகளுக்கு இன்று கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000/- உரிமைத் தொகை பெறும் வகையில்  முதல்வர் 6 மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார். இத்திட்டத்தின் கீழ் தற்போது புதிதாக கண்டறியப்பட்டுள்ள 7.35 இலட்சம் பயனாளிகளுக்கும், ஏற்கனவே, வழங்கப்பட்டு வரும் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுடன் சேர்த்து திட்டத்தினை விரிவாக்கம் செய்து மொத்தம் 1 கோடியே 13 இலட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு நவம்பர் மாதத்திற்கான உதவித் தொகையினை இன்று வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிகழ்ச்சியில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதிமாறன், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர்  சிவ் தாஸ் மீனா, வளர்ச்சி ஆணையர் / முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் .நா.முருகானந்தம்,  பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மரு.ஜெ.ராதாகிருஷ்ணன்,  நிதித்துறை முதன்மைச் செயலாளர்  த.உதயச்சந்திரன்,  சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலாளர் டாக்டர். தாரேஸ் அகமது, கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட சிறப்புப் பணி அலுவலர் க. இளம்பகவத்,  வங்கிகளின் உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News