தேர்தல் எதிரொலி: அரசு அலுவலர்கள் 31க்குள் இடமாற்றம்
தேர்தல் பணி தொடர்புடைய அலுவலர்களை வரும் 31ம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அறிவுறுத்தியுள்ளார்;
தேர்தல் பணி தொடர்புடைய அலுவலர்கள், ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தால், அவர்களை வரும் 31ம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
● தேர்தல் பணியில் நேரடியதாக தொடர்புடைய அலுவலர்கள், சொந்த மாவட்டத்தில் பணிபுரிந்தால், அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்
● ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தால், வரும் ஜூன் 30ல் மூன்று ஆண்டுகள் நிறைவடைவதாக இருந்தாலும், அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்
● பதவி உயர்வு அளிக்கப்பட்டு, ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினாலும், இடமாற்றம் செய்ய வேண்டும்
● வாக்காளர் பட்டியல் தயாரிப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள், தலைமை தேர்தல் அதிகாரி ஒப்புதல் பெற்ற பின், அப்பணியில் தொடர அனுமதிக்கலாம். வேறு ஏதேனும் காரணத்துக்காக, ஒருவர் அப்பணியில் தொடர வேண்டுமானால், தேர்தல் கமிஷன் ஒப்புதல் அவசியம்
● ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோர், ஆறு மாதங்களில் ஓய்வு பெறுவதாக இருந்தால், அவர்களுக்கு விலக்கு அளிக்கலாம். ஆனால், அவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது
● வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தாசில்தார்கள், சப் - இன்ஸ்பெக்டர்கள் போன்றோர், அதே மாவட்டத்திற்குள் இடமாற்றம் செய்யப்படலாம். ஆனால், அவர்கள் வீடு உள்ள சட்டசபை தொகுதியில் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது
● ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் இருப்போரை, வரும் 31ம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது