சென்னையில் 65 வழித்தடங்களில் மட்டுமே தாழ்தள பேருந்துகள் இயக்க வாய்ப்பு.. போக்குவரத்து கழகம் தகவல்..
சென்னையில் 65 வழித்தடங்களில் மட்டுமே தாழ்தள பேருந்துகளை இயக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களுக்காக ஆயிரத்து 107 பேருந்துகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் வெளியிடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில், தாழ்தள பேருந்துகளையும் கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.
இதுதொடர்பாக வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது எந்தெந்த வழித்தடங்களில் தாழ்தள பேருந்துகள் இயக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில், சென்னை போக்குவரத்து கழகம் சார்பில் 130 கிராம வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும், அந்த சாலைகள் குறுகலாக இருப்பதால் தாழ்தள பேருந்துகளை இயக்கினால் பேருந்துகள் கடுமையாக சேதமடைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல, சென்னையில் சுரங்கப்பாதை வழியாக 173 வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வழித்தடங்களில் 100 சதவீத தாழ்தள பேருந்துகளை இயக்கினால் மழை காலத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல மினி பேருந்துகள் இயக்கப்படும் 74 வழித்தடங்களிலும், மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் 186 வழித்தடங்களிலும் தாழ்தள பேருந்துகளை இயக்குவது சாத்தியம் இல்லை எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
342 தாழ்தள பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அவற்றை தோராயமாக 65 வழித்தடங்களில் இயக்க திட்டமிட்டு உள்ளதாக நீதிமன்றத்தில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தாழ்தள பேருந்துகள் இயக்க முடியாத வழித்தடங்களில் மனுதாரரகள் தரப்பு உள்ளிட்டோரை இணைத்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை பிப்ரவரி 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.