சென்னையில் மீண்டும் கனமழை - தலைமைச்செயலகத்திற்குள் வெள்ளம்
சென்னையில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது; தலைமைச்செயலக வளாகத்தினுள் வெள்ளம் புகுந்ததால் பரபரப்பானது.;
சென்னை நகரில் கிண்டி, மாம்பலம், சைதாபேட்டை, சென்ட்ரல், எழும்பூர், புரசைவாக்கம், அமைந்தகரை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக பல இடங்களில் கொட்டிய கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சென்னை தலைமைச்செயலகத்திற்குள் மழை நீர் புகுந்துள்ளது.
இந்த மழையால், அலுவலகம் சென்று வீடு திரும்புவோர், அவதிக்குள்ளாகி உள்ளனர். சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால், அண்ணாசாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, எழும்பூர், பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. அடுத்த ஒரு மணி நேரத்திற்கு சென்னையில் மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய மழையால், சென்னையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.