செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், வங்கி தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட அசல் ஆவணங்களைப் பெற செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

Update: 2024-04-17 15:25 GMT

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி ,முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, தீர்ப்பை தள்ளிவைத்திருந்தார்.

இந்நிலையில், வழக்கு தொடர்பான வங்கி ஆவணங்களின் அடிப்படையில் வாதங்களை முன்வைக்க வேண்டியுள்ளதால், விடுவிக்க கோரிய மனு மீது மீண்டும் வாதிட அனுமதிக்கக் கோரி, செந்தில் பாலாஜி சார்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, விடுவிக்க கோரிய மனு மீது மீண்டும் வாதங்களை முன்வைக்க செந்தில் பாலாஜி தரப்புக்கு அனுமதியளித்து உத்தரவிட்டார். இதற்கிடையில், வங்கியில் இருந்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அசல் ஆவணங்களுக்கும் (சலான்கள்), அமலாக்கத்துறை வழங்கிய வங்கி சார்ந்த ஆவணங்களுக்கும் வேறுபாடுகள் இருப்பதால், வங்கியின் அசல் ஆவணங்களை வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.அல்லி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் அனைத்தையும் செந்தில் பாலாஜிக்கு வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். மேலும், இதனை பெற்றுக் கொள்ள செந்தில் பாலாஜியை ஏப்ரல் 22ஆம் தேதி 3 மணிக்கு மேல் நேரில் ஆஜர்படுத்தும்படி சிறைத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News