சென்னை துறைமுகம் - மதுரவாயல் சாலை: புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது;
பல்வேறு காரணங்களால் நீண்ட நாட்களாக நிலுவையிலிருந்த சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் இன்று கையெழுத்தானது.
தமிழ்நாடு அரசு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் மற்றும் இந்திய கடற்படை ஆகிய துறையினரால் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டது
இத்திட்டத்தின்படி, ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான 20.565 கி.மீ. நீளத்திற்கு ரூ.5855 கோடி மதிப்பில் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை அமைக்கப்படும்.
இந்த இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலையில் சென்னை துறைமுகம் முதல் கோயம்பேடு வரை முதல் அடுக்கில் உள்ளூர் வாகனங்கள் மட்டும் பயணிக்கும் வகையிலும், 13 இடங்களில் வாகனங்கள் ஏறும் / இறங்கும் சாய் தளங்களுடன் அமைக்கப்பட உள்ளது.
இரண்டாவது அடுக்கில் துறைமுகம் முதல் மதுரவாயல் வரை இருபுறமும் பயணிக்கும் கனரக வாகனப் போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.