பாலியல் வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட் மறுப்பு

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.;

Update: 2021-08-17 18:19 GMT

சிறையில் உள்ள சிவசங்கர் பாபா.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் மீது அப்பள்ளி முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரில் கேளம்பாக்கம் போலீசார் அவர் மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்தநிலையில், தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபாவை தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் டெல்லியில் கைது செய்தனர். பின்னர் அவர் தமிழகம் அழைத்து வரப்பட்டார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல கட்டங்களாக விசாரணை நடத்தினர். அவரது பள்ளியில் உள்ள அவரது அறையிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் சில ரகசிய தகவல்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்களும் வெளியானது. பள்ளி ஆசிரியர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அண்மையில், இந்த வழக்கில் 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை செங்கல்பட்டு கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்தனர். இதில் 40 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் இதுவரை சிவசங்கர் பாபா, ஆசிரியைகள் பாரதி, சுஷ்மிதா, தீபா ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபா தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News