முன்னாள் அமைச்சர் மணிகண்டனை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ஜூன் 9-ம் தேதி வரை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
நடிகை அளித்த பாலியல் புகாரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் தன்னை கைது செய்யக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமீன் கோரியுள்ளார். இந்நிலையில் அவருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது என பாதிக்கப்பட்ட நடிகை ஆட்சேபனை மனு தாக்கல் செய்துள்ளார்.
2016-21 காலக்கட்டத்தில் அதிமுக அரசில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக சில ஆண்டுகள் பதவி வகித்தவர் மணிகண்டன். இந்நிலையில் கடந்த வாரம் இவர் மீது பாலியல் புகார் ஒன்றை துணை நடிகை ஒருவர், காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்தார்.
சென்னை, பெசன்ட் நகரில் வசிக்கும் 36 வயது துணை நடிகை, தமிழில் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் அளித்த புகாரில், ''மலேசியாவைச் சேர்ந்த நான், சென்னையில் உள்ள மலேசிய துணைத் தூதரகத்தில் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் பணியாற்றினேன். 2017-ல் அதிமுக ஆட்சியில் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டனுடன் நட்பு ஏற்பட்டது. அவர் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு என்னைத் திருமணம் செய்துகொள்ளவதாக கூறியதால் 5 ஆண்டுகளாக ஒரே வீட்டில் கணவன் - மனைவியாக வாழ்ந்தோம். அவருடன் இருந்த காலகட்டத்தில் 3 முறை கருவுற்றேன். வலுக்கட்டாயமாக கருவைக் கலைக்கச் செய்தார். 5 ஆண்டுகளாக குடும்பம் நடத்திவிட்டு, தற்போது என்னைத் திருமணம் செய்ய மறுத்து, கொலை மிரட்டல் விடுக்கும் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கு அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 313 (பெண்ணின் அனுமதியின்றி கருக்கலைப்பு), 323 ( தாக்குதல், காயம் உண்டாக்குதல்), 417 ( ஏமாற்றுதல்) 376 ( பாலியல் வன்கொடுமை), 506(1) (கொலை மிரட்டல்), 67 (IT Act) ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.
மணிகண்டனை விசாரிக்க போலீஸார் தேடியபோது அவர் தலைமறைவாகிவிட்டார். அவரது 2 செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மணிகண்டன் தற்போது வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அவரது மனுவில், "திருமணம் செய்துகொள்ள மறுத்ததாகக் கூறும் புகார்தாரர், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் இந்த புகாரை அளித்துள்ளார். எனக்கு எதிராகக் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. என்னிடம் பணம் பறிக்கும் நோக்கில் இந்த புகாரை அளித்துள்ளனர். சமுதாயத்தில் பிரபலமானவர்களை மிரட்டிப் பணம் பறிக்கும் கும்பலாக நடிகை செயல்பட்டு வருகிறார். மலேசியாவில் இதுபோலப் பலரை மோசடி செய்துள்ளதாக புகார்கள் உள்ளன. நடிகையைக் கருக்கலைப்பு செய்யும்படி மிரட்டவில்லை. அவராகவே கருக்கலைப்பு செய்து கொண்டுள்ளார். நடிகையை மிரட்டவில்லை. ஆரம்பக்கட்ட விசாரணை ஏதும் மேற்கொள்ளாமல், எனக்கு எதிராக அவசர அவசரமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜூன் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை மணிகண்டனை கைது செய்ய இடைக்காலத்தடை விதித்தார்.