சென்னை மின்சார ரயில் தடம்புரண்டு விபத்து: போக்குவரத்து பாதிப்பு
சென்னை ஆவடி ரயில் நிலையத்தில் புறநகர் மின்சார ரயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் சென்னைக்கு செல்லும் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.;
தடம்புரண்டு விபத்துக்குள்ளான புறநகர் மின்சார ரயில்.
திருவள்ளூர் மாவட்டம், அண்ணனூர் பணிமனையிலிருந்து ஆவடி ரயில் நிலையத்திற்கு புறநகர் மின்சார ரயில் வந்துக்கொண்டிருந்தது. அப்போது ஆவடி ரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய ரயில் சிக்னலை கடந்து நின்றதால் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த ரயில் விபத்து காரணமாக புறநகர் மின்சார ரயில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆவடி அன்னனுர் அருகே ரயில் விபத்தால் அந்த மார்க்கத்தில் உள்ள விரைவு ரயில்கள் நிறுத்தப்பட்டது. சென்ட்ரலில் இருந்து கோவைக்கு செல்லும் கோவை விரைவு ரயில் பட்டரைவாக்கத்திலும், மைசூர் செல்லும் வந்தே பாரத் ரயில் அம்பத்தூரை அடுத்த அன்னனூர் ரயில் நிலையத்திலும், திருப்பதி செல்லும் சப்தகிரி விரைவு ரயில் 6.20 மணிக்கு செல்லும் ரயில் சென்ட்ரல் ரயில் நிலையத்திலும், பெங்களூர் செல்லும் டபுள் டக்கர் விரைவு ரயில் 7.25 மணிக்கு புறப்பட வேண்டியது சென்ட்ரலில் நிறுத்தப்பட்டுள்ளது.
பனிமூட்டம் காரணமாக விபத்து ஏற்பட்டதா? அல்லது ரயில் ஓட்டுநர் தூங்கியதால் இந்த விபத்து நிகழ்ந்ததா என ஆவடி ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.