செங்கல்பட்டில் பரபரப்பு: இரட்டை கொலையில் தொடர்புடைய 2 பேர் என்கவுன்டர்
செங்கல்பட்டில் இரவில் நடந்த இரட்டை கொலையில் தொடர்புடைய இருவரை, போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். அடுத்தத்தடுத்த கொலைகளால் செங்கல்பட்டில் பதற்றம் நிலவுகிறது.;
செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ரவுடிகளில் அட்டகாசம் அதிகளவில் உள்ளது. இதை ஒடுக்க காவல்துறையினர் முயன்று வருகின்றனர்.
இந்த சூழலில்தான், நேற்று நகரில் இரட்டை கொலை நடந்தது. செங்கல்பட்டு நகர காவல்நிலையம் எதிரில் உள்ள டீக்கடை முன்பாக, அப்பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற அப்பு கார்த்திக், அடையாளம் தெரியாத சிலரால் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலையால் பதற்றம் ஏற்பட்ட நிலையில், அதே கும்பல் செங்கல்பட்டு மேட்டுத்தெரு பகுதியில் காய்கறி வியாபாரி சீனிவாசன் என்பவரது மகன் மகேஷ் ( 22) என்பவரை, அவரது வீட்டிலேயே வைத்து சரமாரியாக வெட்டிக் கொன்றது. அடுத்தடுத்து நடந்த இரட்டை கொலைச் சம்பவங்களால், செங்கல்பட்டு நகரில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.
இந்த கொலைகள் குறித்து காவல்துறையினர் 4 தனிப்படைகள் அமைத்து விசாரணையை உடனடியாக தொடங்கினர். இதில், மாமண்டூர் அருகே கொலையாளிகள் மறைந்திருப்பதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அப்பகுதிக்கு விரைந்து, போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது, போலீசாரிடம் இருந்து தப்பிக்க, ரவுடிகள் நாட்டு வெடிகுண்டுகளை போலீஸார் மீது வீசினர். இதில் போலீஸார் தரப்பில் இருவருக்குக் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, தற்காப்பு நடவடிக்கையாக போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், மொய்தீன், தினேஷ் ஆகிய இருவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தப்பிச் சென்ற மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். செங்கல்பட்டு நகரில், அடுத்தடுத்து 4 கொலைகள் நடந்திருப்பது, செங்கல்பட்டு நகரை பரபரப்புக்குள்ளாக்கி இருக்கிறது.