அறநிலைய துறை முறைகேடு வழக்கு: தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

அறநிலைய துறை முறைகேடு வழக்கு தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2024-06-27 14:10 GMT

கோவில் நிதியில் முறைகேடு செய்த விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை முதல் நிலை செயல் அலுவலருக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கையை 6 மாதங்களில் முடிக்கும்படி, அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையில் முதல் நிலை செயல் அலுவலராக பணியாற்றிய முத்துசாமி என்பவர், கோயில் நிதியில் ஒரு கோடியே 37 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்யதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இருந்த நிலையில் கடந்த 2020 ஆகஸ்ட்டில் விருப்ப ஓய்வு கேட்டு அறநிலையத்துறை ஆணையருக்கு அவர் கடிதம் எழுதினார். அந்த கோரிக்கையை நிராகரித்த அறநிலையத்துறை ஆணையர், முத்துசாமி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து, விருப்ப ஓய்வை ஏற்கும்படி அறநிலையத் துறைக்கு உத்தரவிடக் கோரி முத்துசாமி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, அவரது விருப்ப ஓய்வு மனுவை ஏற்கும்படி தமிழக அரசின் அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதை எதிர்த்து அறநிலையத் துறை ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் குமரேஷ்பாபு அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, முத்துசாமிக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கையை 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டது.

Tags:    

Similar News