தென் தமிழக மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

தென் தமிழக மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு . 17 ஆண்டுகளுக்கு பிறகு அதிக மழையை சந்திக்கும் தென்மாவட்டங்கள்;

Update: 2022-04-12 01:41 GMT

தென் தமிழக மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு . 17 ஆண்டுகளுக்கு பிறகு அதிக மழையை சந்திக்கும் தென்மாவட்டங்கள்.

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடல் பகுதியில் நீடிக்கும் காற்று சுழற்சி மன்னார் வளைகுடா தென் தமிழக கடல் பகுதி வழியாக குமரி கடல் நோக்கி நகரும் -- இந்த காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் நான்கு நாட்களை பொறுத்தவரை தென் தமிழக மாவட்டங்களான தூத்துக்குடி , நெல்லை , தென்காசி , கன்னியாகுமரி , இராமநாதபுரம் , விருதுநகர் , மதுரை தேனி திண்டுக்கல் , ஆகிய தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் . சில இடங்களில் மிக கனமழையும் மாஞ்சோலை போன்ற மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கும் வாய்ப்புள்ளது

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களை பொறுத்தவரை கன்னியாகுமரி முதல் கோவை , திருப்பூர் , நீலகிரி வரை உள்ள மாவட்டங்களிலும் மாலை நேரத்தில் கனமழை பெய்யும். ஈரோடு , சிவகங்கை , புதுக்கோட்டை , திருச்சி உள்ளிட்ட உள்மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும். இன்று தஞ்சை , நாகை , திருவாரூர் , மயிலாடுதுறை , அரியலூர் , பெரம்பலூர் , உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.

தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழையின் போது தரைக்காற்று பலமாக வீசும். கடுமையான இடி மின்னல் இருக்கும் என்பதால் பொதுமக்கள் மழையின் போது திறந்த வெளியில் நிற்க வேண்டாம். மரங்கள் மற்றும் மின்கம்பங்களுக்கு அருகிலும் செல்ல வேண்டாம். அடுத்த 4 நாட்களை பொறுத்தவரை குறிப்பாக மாலை இரவு நேரத்தில் தான் மழை பெய்யும் . பகலில் வெயிலின் தாக்கம் இருக்கும்.

ஏப்ரல் மாத்தில் பொதுவாக தென் தமிழக மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் அதிக மழையை பெறும் . ஏப்ரல் மாதத்தை பொறுத்தவரை 2005 ஆம் ஆண்டு தென் தமிழக மாவட்டங்கள் வரலாறு காணாத மழையை சந்தித்தது. 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நெல்லை மாவட்டம் 181 மிமீ மழையும் தூத்துக்குடி மாவட்டம் சராசரியாக 167 மிமீ மழையையும் பெற்றது. ஏப்ரல் 4, 2005 -- அன்று மாஞ்சோலை ஒரே நாளில் 405 மிமீ மழையை பெற்றது.

தற்போது 17 ஆண்டுகளுக்கு பிறகு அதிகமழையை சந்திக்க போகிறது தென்மாவட்டங்கள். இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நெல்லை , தூத்துக்குடி , விருதுநகர் , இராமநாதபுரம் , மதுரை , தேனி , தென்காசி , கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்கள் இயல்பை விட அதிக மழையை சந்திக்கும் . கோவை , நீலகிரி , திருப்பூர் , சிவகங்கை , திண்டுக்கல் , ஈரோடு , சேலம் ஆகிய மாவட்டங்களிலும் ஓரளவு நல்ல மழையை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News