ஓட்டுக்கு பணப்பட்டுவாடா: 'டாப் கியரில்' தலைநகர் சென்னை
தேர்தலுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா ஜோராக நடக்கிறது
பெருநகர சென்னை மாநகராட்சி உள்ள 200 வார்டுகள், புதிதாக தோற்றுவிக்கப்பட்ட, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளில் உள்ள 70 மற்றும் 48 வார்டுகளில், வரும், 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெறவுள்ளது. சென்னையில், 2,670 வேட்பாளர்களும், தாம்பரத்தில், 683 வேட்பாளர்கள், ஆவடியில், 396 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
இதில், கவுன்சிலர்களாக தேர்வாகும் நபர்கள் சேர்ந்து, மறைமுக தேர்தல் மூலமாக , மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுப்பர். மேற்கண்ட மாநகராட்சிகளில், மேயர் பதவியை பிடிக்கும் நபர், சாலை ஒப்பந்தம் முதல் வீடு, கட்டடம் கட்டுவோரிடம் பணம் வாங்குதல் உள்ளிட்ட அனைத்து பணி ஒப்பந்தத்தங்களிலும் பணம் குவியும்.
இதில், கவுன்சிலர்களின் பணியும், பங்கும் மிக அதிகம் என்பதால், கவுன்சிலர் பதவியை பிடிக்க, அரசியல் கட்சி வேட்பாளர் முதல் சுயேச்சைகள் வரை அனைத்து வேட்பாளர்களும் களத்தில் முட்டி மோதுகின்றனர்
ஒரு ஓட்டுக்கு, சுயேச்சை வேட்பாளர்கள் 3,000 ரூபாய் வரையிலும், அரசியல் கட்சி வேட்பாளர்கள் 5,000 ரூபாய் வரையிலும் தாராளம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்துடன், ஒரே குடும்பத்தில் 10 ஓட்டுகளுக்கு மேல் இருப்பவர்களுக்கு குக்கர், அரிசி மூட்டை, புடவை, மளிகை பொருட்கள் என அள்ளி வீசுவதாகவும் தெரியவந்துள்ளது.
இவற்றை எல்லாம் தடுக்க, தேர்தல் பறக்கும் படைகள், 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும், இவர்கள் பெரும்பாலும் முக்கிய சாலைகளில் மட்டுமே சோதனை நடத்துவதால், வேட்பாளர்கள் வீடு வீடாக பட்டுவாடா செய்வதில் எந்த பிரச்னையும் ஏற்படுவதில்லை. அந்தந்தப் பகுதி பொறுப்பாளர்கள் வாயிலாக, வாக்காளர்களுக்கு, அதிகாலை, இரவு நேரங்களில் பணம் வினியோகம் செய்யப்படுகிறது.
இதையும் மீறி தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை எடுத்து பட்டுவாடா செய்ய வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் மதிப்பு விபரம்
மாதவரம் - 2,37,460
தண்டையார்பேட்டை - 1,15,650
ராயபுரம் - 90,00,000
திரு.வி.க.நகர் - 3,63,000
அம்பத்துார் - 1,75,800
அண்ணாநகர் - 80,688
தேனாம்பேட்டை - 36,00,000
வளசரவாக்கம் - 24,000
ஆலந்துார் - 7,00,000
சோழிங்கநல்லுார் - 1,36,500
மொத்தம் - 1,44,33,098