அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, ரகுபதி, ராஜ கண்ணப்பன், பெரிய கருப்பன் ஆகியோர் மீதான வழக்குகள் ரத்து

தேர்தல் தொடர்பாக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பெரிய கருப்பன், கண்ணப்பன் மற்றும் ரகுபதி ஆகியோர் மீதான வழக்குகளை ரத்து செய்து, சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;

Update: 2023-08-10 11:58 GMT

சென்னை உயர் நீதிமன்றம் (கோப்பு படம்).

கடந்த 2019 ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது கரூரில் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றபோது, தேர்தல் விதிகளை மீறியதாக தற்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் ஜோதிமணி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அனுமதிக்கப்பட்ட வாகனங்களை விட, அதிக வாகனங்களில் சென்றதாக கரூர் டவுன் போலீசார் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதேபோல் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போதும் அதிமுக- திமுகவினருக்கு இடையே நடந்த மோதல் தொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இதைப்போல் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது சிவகங்கையில் அதிமுக- திமுகவினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன் மீது பள்ளத்தூர் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இதேபோல் அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், ரகுபதி உள்ளிட்டோர் மீதும் தேர்தல் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, தற்போதைய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது தொடர்பாக அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அமைச்சர் ரகுபதி உட்பட 5 பேர் மீது பொன்னமராவதி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி அமைச்சர்கள் செந்தில் பாலாஜி ,பெரிய கருப்பன், ராஜகண்ணப்பன், ரகுபதி ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, ராஜகண்ணன், பெரியகருப்பன், ரகுபதி ஆகியோர் மீதான தேர்தல் வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

Similar News