அறுவடை செய்யும் வரை 2 மாதம் காத்திருக்க முடியாதா? என்.எல்.சி.க்கு நீதிபதி சரமாரி கேள்வி

அரிசிக்கும் காய்கறிக்கும் அடித்துக்கொள்வதை நம் தலைமுறையிலேயே பார்க்கத்தான் போகிறோம் என நீதிபதி வேதனையுடன் தெரிவித்தார்

Update: 2023-07-28 13:30 GMT

நிலக்கரி சுரங்க விரிவாக்கப்பணிகளுக்காக விளைநிலத்தை அழித்தபோது

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி 2-வது சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக கரிவெட்டி, கத்தாழை, மும்முடிசோழகன், வளையமாதேவி உள்ளிட்ட பகுதியில் ஏற்கனவே என்.எல்.சி.யால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் நேற்று முன்தினம் முதல் முதற்கட்ட பணியை தொடங்கியது. கால்வாய் அமைப்பதற்காக அந்த நிலத்தில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அழிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் தொடர் போராட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில், பயிர்கள் செழித்து வளர்ந்திருந்த நிலங்களில் என்எல்சி நிர்வாகம் பள்ளம் தோண்டியது தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பி வேதனை தெரிவித்துள்ளது.

என்எல்சி தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி என்எல்சி நிர்வாகம் தொடர்ந்த அவசர வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது போராட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று கூறி காவல்துறை தரப்பில் வீடியோ ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதை விசாரித்து என்எல்சி நிறுவனம் மற்றும் ஊழியர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக ஆகஸ்ட் 3ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறி வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தார்.

இதற்கிடையே கால்வாய் அமைக்கும் பணிக்காக நிலங்களை தோண்டுவது குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது, என்எல்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறும்போது, 20 வருடங்களுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் மதிப்பை விட 3 மடங்கு அதிகமாக இழப்பீடு வழங்கப்பட்டதாகவும், இப்போது நிலத்தை என்எல்சி நிர்வாகம் சுவாதீனம் எடுத்துக்கொள்ள உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, 20 ஆண்டுகளாக நிலத்தை சுவாதீனம் எடுக்காமல் இருந்துவிட்டு, இப்போது பயிர்கள் அறுவடை செய்யும் வரை 2 மாதம் காத்திருக்க முடியாதா? என்று கேள்வி எழுப்பினார்.

இது குறித்து நீதிபதி கூறுகையில், நிலத்தில் புல்டோசர் வைத்து கால்வாய் தோண்டும் பணிகளை பார்த்து அழுகையே வந்துவிட்டது. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் எனக் கூறிய வள்ளலார் பிறந்த ஊருக்கு அருகிலேயே பயிர்கள் அழிக்கப்படுவதை காண முடியவில்லை. நிலத்தை எடுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், பயிர்கள் அழிக்கப்படுவதை ஏற்க முடியாது. நாம் உயிருடன் இருக்கும் காலத்திலேயே பெரிய பஞ்சத்தை பார்க்கப்போகிறோம். அரிசிக்கும் காய்கறிக்கும் அடித்துக்கொள்வதை நம் தலைமுறையிலேயே பார்க்கத்தான் போகிறோம். அப்படி ஒரு நிலைமை வரப்போகிறது. அப்போது இந்த நிலக்கரியெல்லாம் பயன்படாது. இதற்காக என்எல்சி கோபித்துக்கொண்டாலும் பரவாயில்லை.

கொள்ளிடம் பாயும் இடங்கள் எல்லாம் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. பஞ்சத்தின் ஆபத்தை உணராமல் தோண்டிக்கொண்டே இருக்கிறார்கள். இதுபோன்ற நிறுவனங்கள் காரணமாக, சோழநாடு சோறுடைத்து என்ற பெருமையை அந்த பகுதிகள் இழந்துவிட்டன.

பூமியை தோண்டித் தோண்டி நிலக்கரி, மீத்தேன் என ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டே இருந்தால் அந்த வெற்றிடத்தை எப்படி நிரப்புவது? என்ற கேள்வி எழுகிறது. மூன்று மடங்கு இழப்பீடு வழங்கப்பட்டிருப்பதாக என்எல்சி கூறுகிறது. ஆனால் எத்தனை மடங்கு இழப்பீடு வழங்கினாலும்கூட பணத்தை வைத்துக்கொண்டு விவசாயி என்ன பண்ணுவான்? மக்கள் பாதிக்கப்படுவதை அதிகாரிகளும் புரிந்துகொள்ளவில்லை என்று நீதிபதி தண்டபாணி வேதனை தெரிவித்தார்.

Tags:    

Similar News