லியோ படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடைக்குமா? நாளை தெரியும்

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் சிறப்பு காட்சி தொடர்பான வழக்கை நாளை முதல் வழக்காக எடுத்துக் கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Update: 2023-10-16 11:58 GMT

லியோ திரைப்படத்தின் போஸ்டர்.

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது. அக்டோபர் 19 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு ரசிகர்கள் காட்சி திரையிடவும், அன்றைய தினத்தில் இருந்து 24 ஆம் தேதி வரை காலை 7 மணியில் இருந்து காட்சிகள் திரையிடவும் அனுமதி கோரி லியோ படக்குழு தரப்பு, தமிழ்நாடு அரசுக்கு விண்ணப்பித்து இருந்தது.

அந்த விண்ணப்பத்தை பரிசீலித்த அரசு, 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி அளித்தது. காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை மட்டுமே திரையிட வேண்டும் எனவும், சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில், காலை 4 மணிக்கு ரசிகர்களுக்கான காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் எனவும், காலை 9 மணி என்பதை 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என லியோ பட தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கீரின் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது, மனுதாரர் நிறுவனம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் ஆஜராகி, அக்டோபர் 19 ஆம் தேதி இரண்டு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்ததாகவும், ஆனால் ஒரு சிறப்புக் காட்சிக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

மேலும், அக்டோபர் 20 முதல் 24 வரை ஒரு கூடுதல் காட்சிக்கு கேட்டோம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் 9 மணிக்குத்தான் திரையிட வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் வழக்கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் தெரிவித்தார். குறிப்பாக, காலை 9 மணிக்குத்தான் முதல் காட்சி திரையிட வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறார்கள், ஒரு காட்சிக்கும் மற்றொரு காட்சிக்கும் இடையில் 30 நிமிட இடைவெளியும், படத்தில் 20 நிமிட இடைவேளையும் இருக்க வேண்டும் என்பதால், ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகளுக்கு 18 மணி நேரம் 45 நிமிடங்களாகும். ஆனால் காலை 9 மணிக்கு காட்சிகள் திரையிட துவங்கினால் 16 மணி நேரம் 30 நிமிடங்களில் 5 காட்சிகளை திரையிடும்படி அரசு உத்தரவிட்டுள்ளது என்றார்.

அதனால் காலை 9 மணிக்கு பதிலாக, காலை 7 மணிக்கு திரையிட அனுமதிக்க வேண்டும் எனவும் வழக்கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் கோரிக்கை விடுத்தார். அரசு தரப்பில் தலைமை வழ்ககறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, கூடுதல் காட்சிகளை திரையிடுவதை ஒழுங்குபடுத்தக் கோரி மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு சென்னையில் தலைமை நீதிபதி அமர்விற்கு மாற்றப்பட்டுள்ளதால், இந்த வழக்கையும் அந்த பொது நல வழக்குடன் இணைத்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதனை ஏற்ற நீதிபதி, மதுரை கிளை உத்தரவை பார்த்துவிட்டு, இந்த வழக்கை நாளை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார். இதனால், லியோ திரைப்படத்துக்கு ரசிகர்கள் காட்சிக்கு அனுமதி கிடைக்குமா? என்பது நாளை தெரியவரும்.

Tags:    

Similar News