இன்று நள்ளிரவு முதல் பேருந்துகள் ஓடாது: அதிகாரிகளுடன் அமைச்சர் திடீர் ஆலோசனை

இன்று நள்ளிரவு முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதால் அதிகாரிகளுடன் அமைச்சர் சிவசங்கர் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Update: 2024-01-08 10:57 GMT

பைல் படம்.

போக்குவரத்து துறை ஊழியர்களுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக் காத்திருப்போருக்கு பணி வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பஞ்சப்படி வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தன.

இதனிடையே சிஐடியு, ஏஐடியுசி, எச்எம்எஸ் ஆகிய தொழிற்சங்கங்கள் தனியாகவும், அண்ணா தொழிற்சங்க பேரவை தனியாகவும் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தன. இதையடுத்து சென்னையில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள், தொழிலாளர் நலத்துறை, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சமரசம் ஏற்படாததால், போக்குவரத்துத் தொழிற்சங்க நிர்வாகிகள் நாளை (ஜனவரி 9-ம் தேதி) முதல் வேலைநிறுத்தத்தை அறிவித்திருந்தனர்.

இதனையடுத்து இன்று சென்னை தேனாம்பேட்டையில் 3-வது முறையாக மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. போக்குவரத்து துறையின் சார்பில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குனர் இளங்கோ, மாநகரப் போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் ஆகியோர் பங்கேற்றனர். தொழிற்சங்கங்களின் தரப்பில் சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த பேச்சுவார்த்தை  சுமார் ஒரு மணி நேரமாக நடைபெற்று வந்த நிலையில், தோல்வியில் முடிந்தது. இதனால், நாளை முதல் முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இன்று இரவு 12 மணிக்கு மேல் பேருந்துகள் ஓடாது என சிஐடியூ தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழலில் பேருந்துகள் இயக்கம் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார். போக்குவரத்துத்துறை செயலாளர் பனீந்திர ரெட்டி, அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இளங்கோ, மாநகரப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான், காவல்துறை அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தற்போதைய சூழல் குறித்தும், பேருந்துகளை சீராக இயக்குவது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Tags:    

Similar News