பட்டியலின பெண் தயாரித்த காலை உணவு: சாப்பிட மறுத்த பள்ளி குழந்தைகள்
கோவில்பட்டி அருகே பட்டியலின பெண் தயாரித்த காலை உணவை பள்ளி குழந்தைகள் சாப்பிட மறுத்த விவகாரம் பெரிய பிரச்சினையாக உள்ளது.;
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே சின்னமலைக்குன்று ஊராட்சிக்கு உட்பட்ட உசிலம்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்தம் 11 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் சமையலராக உசிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த முனியசெல்வி (29) என்பவர் பணியமர்த்தப்பட்டார்.
இவர் கடந்த 25 ஆம் தேதி முதல் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் சமையல் செய்து மாணவ மாணவிகளுக்கு வழங்கி உள்ளார். ஆனால் மாணவ மாணவிகள் பெற்றோர்களின் வற்புறுத்தலால் உணவை சாப்பிடாமல் தவிர்த்து உள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த சமையலர் முனிய செல்வி தனது மேலதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜோன் கிறிஷ்டி பாய், எட்டயபுரம் வட்டாட்சியர் மல்லிகா, எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது, உதவி தொடக்க கல்வி அலுவலர் முத்தம்மாள் மற்றும் அதிகாரிகள் குழுவினர் இன்று பள்ளிக்கு சென்று பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தொடர்ந்து பள்ளிக்கு வருகை தந்த 11 மாணவர்களுக்கும் உணவுகள் பரிமாறி சாப்பிட அறிவுறுத்தினர். ஆனால் குழந்தைகள் சாப்பிடாமல் அழுது கொண்டே வெகு நேரம் அமர்ந்திருந்தனர். அப்போது பெற்றோர்கள் தரப்பில் சமையலரை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
கிராம மக்களின் கோரிக்கை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துவிட்டு அதிகாரிகள் குழுவினர் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனர். இந்நிலையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உசிலம்பட்டி கிராமத்துக்கு நேரில் சென்று அங்கு பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, வீட்டிலேயே காலை உணவு சாப்பிட்டு வந்துவிட்டதாக மாணவ, மாணவிகள் அமைச்சர் கீதாஜீவனிடம் தெரிவித்தனர்.
ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் இரண்டு மாணவர்கள் மட்டுமே சாப்பிடுவதாகவும், மற்ற மாணவர்கள் தவிர்ப்பதாகவும் தகவல் வந்தது. ஆகவே நேரில் ஆய்வு செய்ய வந்தேன். பள்ளி மாணவ மாணவிகளுடன் பேசினேன். அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை.
பெர்சனல் மோட்டிவில் சமையலர் பெண்ணுடன் சண்டை போட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த பிரச்சனைக்கு நாளையே முற்றுப்புள்ளி வைக்கப்படும். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.