முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்- பரபரப்பு
சென்னையில் உள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடு, விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் குண்டு வெடிக்கும் என்று வந்த தொலைபேசி மிரட்டலால் பரபரப்பு நிலவியது.;
சென்னையில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறையை, தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர், சென்னை விமான நிலையம் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், குறிப்பிட்ட நேரத்தில் வெடிகுண்டு வெடித்து தகர்ந்து போய்விடும் என்றும் கூறி மிரட்டல் விடுத்துவிட்டு, இணைப்பை துண்டித்தார்.
இதனால் பரபரப்பான போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் முதலமைச்சரின் வீடு, விமான நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு விரைந்து சென்றனர். அங்கு, மோப்ப நாய் உதவியுடன் நிபுணர்கள் சோதனை செய்ததில், வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. முடிவில், வெடிகுண்டு மிரட்டலானது வெறும் புரளி என்று தெரிய வந்தது.
இதையடுத்து, தொலைபேசியில் தொடர்பு கொண்ட எண்ணை வைத்து, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர், நெல்லை மாவட்டம் சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்த தாமரைக்கண்ணன் என்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, தாமரைக்கண்ணனை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர். இதில், கஞ்சா போதையில், காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.